தொல்லை தரும் வழக்குகளை விசாரிக்க புதிய நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
தனிநபரின் தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் வெளியிடுவது, மிரட்டும் வகையில் நடப்பது தொடர்பானவை அவற்றில் அடங்கும்.
இன்று முதல் அனைத்து குற்றவியல் மற்றும் சிவில் அச்சுறுத்தல் கோரிக்கைகளை அச்சுறுத்தல் பாதுகாப்பு நீதிமன்றம் விசாரிக்கும் என்று சட்ட அமைச்சும் அரசு நீதிமன்றங்களும் இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
ஆனால் சிவில் அல்லது குடும்ப வழக்குகளின் கோரிக்கை இங்கு விசாரிக்கப்படாது என்றது அறிக்கை. சைனாடவுனில் உள்ள அரசு நீதிமன்றக் கட்டடத்தில் புதிய நீதிமன்றம் செயல்படும்.
பாதுகாப்பு உத்தரவு, பொய்த் தகவல் தொடர்பான உத்தரவு உள்ளிட்ட விண்ணப்பங்கள் எளிய முறையில் விசாரணை நடத்தப்படும்.
ஆனால் ஒருவர் மட்டுமே கோரிக்கை விடுப்பவராகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.
அரசு நீதிமன்ற இணையம் வழியாக வழக்குகளுக்கான மனுக் களைச் சமர்ப்பிக்கலாம்.
நீதிமன்றத்துக்கு வராமலே இணையம் வழியாக சர்ச்சையைத் தீர்த்துக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
புதிய நீதிமன்றம், வழக்குகளை உடனடியாக விசாரிப்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மனு சமர்ப்பிக்கப்பட்ட 48 முதல் 72 மணி நேரத்தில் வழக்கை விசாரிக்க புதிய நீதிமன்றம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆபத்தான வன்முறைச் சம்பவங்களாக இருந்தால் 24 மணி நேரத்திற்குள் விசாரிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.
தனிநபர் பாதுகாப்பு உத்தரவு தொடர்பான மனுக்கள் சமர்பிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் விசாரிக்கவும் புதிய நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
தொல்லை தொடர்பான வழக்குகள் புதிய நீதிமன்றம், மாவட்ட, மாஜிஸ்டிரேட் நீதிமன்றங்களுக்கு இடையே இன்று முதல் மாற்றப்படலாம்.
புதிய நீதிமன்றம், குடும்ப நீதிமன்றத்துக்கு இடையே மாற்றப்படும் இத்தகைய வழக்குகள் பின்னர் விசாரிக்கப்படும் என்று நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.

