தெலுக் பிளாங்காவின் நான்கறை 'பிடிஓ' வீடுகளுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
அண்மைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதற்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இம்மாதம் வீவக விற்பனைக்கு வெளியிட்ட தெலுக் பிளாங்கா வீடுகளின் விலைகள் அதிகமாக இருந்தாலும் அதை ஒரு பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ளவில்லை.
புக்கிட் மேராவின் முதிர்ச்சியடைந்த பேட்டையில் புதிய வீடுகள் இடம்பெற்றுள்ன.
தெலுங் பிளாங்கா பீக்கன் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்டுள்ள 70 வீடுகளுக்கு நேற்று மாலை 5.00 மணி நிலவரப்படி 3,124 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இதனால் முதல் முறையாக வீவக வீடுகளை வாங்கும் 28 பேரில் ஒருவருக்கு மட்டுமே வீடு கிடைக்கும் எனத் தெரிகிறது.
2வது முறையாக வீடு வாங்குவோருக்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. தெலுக் பிளாங்கா எம்ஆர்டி நிலையத்திலிருந்து நடக்கும் தொலைவில் உள்ள தெலுக் பிளாங்கா நான்கறை வீடுகள் உள்ளன.
ஒவ்வொன்றும் $602,000 முதல் $710,000 வரையில் விற்கப்படு கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிடிஓ வீடுகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டபோது கடைசியாக பேராதரவு கிடைத்தது.
கேலாங்கில் உள்ள 334 நான்கறை வீடுகள் அப்போது விற்கப்பட்டன. ஒவ்வொரு வீட்டுக்கும் 15 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
தெலுங் பிளாங்கா பீக்கனின் 105 மூவறை வீடுகளுக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
போட்டி அதிகமில்லையென்றாலும் ஒவ்வொரு வீட்டுக்கும் ஏறக்குறைய மூன்று விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்த மூவறை வீடுகளுக்கான விலை $419,000க்கும் $504,000க்கும் இடைப்பட்டிருக்கும்.

