தேசிய தின அணிவகுப்புக்கு தயாராகும் மரீனா பே மிதக்கும் மேடை

2 mins read
f1dae62b-1e97-4f23-95d5-1348cd7ae38f
-

மரீனா பே மிதக்கும் மேடையில் இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்புக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கொவிட்-19 கட்டுப்பாடுகளால் அணிவகுப்பில் கலந்துகொள்ள முடியும் என்பது உறுதியாகத் தெரியாதபோதும், ஆயுத்தப் பணிகள் நடந்து வருகின்றன.

இவ்வாண்டு பிப்ரவரி முதல் மே வரை, தேசிய தின அணிவகுப்புக்குத் தேவையான பொருள் சேவைகளைப் பெற, ஐந்து குத்தகைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களுக்கான பொருட்கள், ஆடைகள், ஒளி கட்டமைப்புகள், மழை பொழிவுக்கான சிறப்பு காட்சி அமைப்புகள் ஆகியவை தேவை என குத்தகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குத்தகை ஆவணங்கள் அரசாங்கத்தின் ஜீபிஸ் (Gebiz)இணையவாசலில் இடம்பெற்றுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் கூறியது.

மழைபொழிவு காட்சி அமைப்புக்குக் கோரும் குத்தகை ஆவணங்களில், அணிவகுப்பு வெளிப்புறத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டது. தண்ணீர் அளவுக்கு ஏற்ப தண்ணீரில் நகரும் காட்சி அமைப்பு தேவை என்றும் குறிப்பிடப்பட்டது.

மேலும், தேசிய தின அணிவகுப்பின் சூழல் தொடர்ந்து மாறிக்கொண்டு இருப்பதால், தேவையான சேவைகளை பற்றிய முழுமையான விவரங்களைத் தற்போதைக்கு தெரிவிக்க முடியாது என்றும் குத்தகை ஆவணங்களில் கூறப்பட்டது.

இந்நிலையில் மரீனா பே மிதக்கும் மேடையில் ஜூலை3ஆம் தேதி வரை பராமரிப்புப் பணி நடைபெறுகிறது என்று கூறும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு இரண்டு ராட்சதத் திரைகள் வைக்கப்பட்டிருந்தன என்றது ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ்.

மரீனா பே மிதக்கும் மேடையில் கடைசியாக நடந்த தேசிய தின அணிவகுப்பில் அத்தகைய திரைகள் இடம்பெற்றிருந்தன. கொவிட்-19 சூழலால் கடந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பு சில இடங்களில் சிறிய அளவில் நடத்தப்பட்டது. கிருமிப்பரவல் கட்டுக்குள் இருந்தால், இவ்வாண்டு அணிவகுப்பு மிதக்கும் மேடையில் நடைபெறும் என்று தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் முன்னதாகக் கூறியிருந்தார்.