மேலும் 31 பேருக்கு நேற்று கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் சிங்கப்பூரின் மொத்த கொவிட்-19 தொற்று எண்ணிக்கை 62,100ஐ எட்டியுள்ளது. நேற்றைய எண்ணிக்கையில் 24 பேர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சமூகத் தொற்று நோயாளிகளில் தொடர்புகள் கண்டறியப்படாத நிலையில் ஐவர் உள்ளதாகவும் கூறப்பட்டது.
எஞ்சிய 19 பேரில் தனிமை உத்தரவின்கீழ் 18 பேர் ஏற்கெனவே வைக்கப்பட்டனர். மீதமுள்ள ஒருவர், கண்காணிப்புப் பணிகளின்போது கிருமித்தொற்று நோயாளியாக அடையாளம் காணப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் ஏதும் பதிவாகவில்லை.
வெளிநாட்டிலிருந்து வந்த ஏழு பேரும் நேற்றைய எண்ணிக்கையில் அடங்குவர். சிங்கப்பூர் வந்தவுடன் வீட்டில் இருப்பதற்கான உத்தரவு இவர்களுக்குப் பிறப்பிக்கப்பட்டது. எழுவரில் அறுவர் சிங்கப்பூரர் அல்லது நிரந்தரவாசி என்றும் கூறப்பட்டது.
இதற்கிடையே தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தபோது கொவிட்-19 நோயாளிகள் சென்றிருந்த இடங்களின் பட்டியலில் 'சிலேத்தார் மால்', 'பிளாசா சிங்கப்பூரா' கடைத்தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பட்டியலில் 'ஹவ்காங் கிரீன்' கடைத்தொகுதியில் அமைந்துள்ள 'பீட்சா ஹட்' உணவகமும் இரண்டு முறை இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் தொடர்பு கண்டறியப்படாத ஏழு கொவிட்-19 நோயாளிகளில், ஹவ்காங் கிரீன் கடைத்தொகுதியின் 'பீட்சா ஹட்' உணவக விநியோக ஓட்டுநரான 26 வயது மலேசியரும் அடங்குவார்.
கொவிட்-19 நோயாளிகள் சென்றிருந்த இடங்களைத் தவிர்க்கத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

