பல பெண்களைக் குறிவைத்து தன் கைபேசியைக் கொண்டு அவர்களின் பாவாடைக்குள் படமெடுத்த கெல்மென் வோங் இயூ ஹுய் என்பவருக்கு 2019ஆம் ஆண்டில் 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், மறுபடியும் அதே குற்றத்தை 24 வயது வோங் சென்ற ஆண்டு புரிந்ததை அடுத்து நேற்று 16 வாரச் சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது.
வோங் சென்ற ஆண்டு மார்ச் 11ஆம் தேதியன்று காலை 7.45 மணியளவில் 'ச்சைனீஸ் கார்டன்' எம்ஆர்டி நிலையத்தில் இருந்த சமயம், அங்கு பள்ளிச் சீருடையில் இருந்த 13 வயது சிறுமியைக் கண்டதாகவும் மின்படிகளில் சென்ற சிறுமியின் பின்னால் நின்றவாறு அவர் பாவாடைக்குள் படமெடுத்ததாகவும் கூறப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மறுநாள் காலை நிலைய அதிகாரி அமாட் கஸாலிக்குத் தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் அன்று காலை 7.45 மணியளவில் எம்ஆர்டி நிலையத்தைக் கண்காணித்த திரு அமாட், 27 வயது மாது பின்னால் நின்றவாறு வோங் படமெடுப்பதைப் பார்த்துவிட்டார். அதையடுத்து போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு வோங் கைதானார்.
தம் கட்சிக்காரருக்கு பாலியல் ரீதியான மனநலப் பிரச்சினை இருப்பதாக தற்காப்பு வழக்கறிஞர் கூறியிருந்ததோடு மனநலக் கழகத்திற்கு வோங் ஜூலை 23ஆம் தேதியன்று தன் அடுத்த பரிசோதனைக்குச் செல்லவேண்டும் என்றார்.