கர்ப்பிணிகளும் தாய்ப்பால் கொடுக்கும் அன்னையரும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.
அந்த ஊசி அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் என்று இங்குள்ள வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
உருமாறிய புதிய கிருமி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இங்கு சமூகத் தொற்றும் கூடிவருகிறது. இந்த நிலையில், கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமானதாக ஆகி இருக்கிறது. தொற்று ஏற்படும் பட்சத்தில் மற்றப் பெண்களைவிட கர்ப்பிணிகளுக்குப் பிரச்சினைகள் அதிகம் என்று அவர்கள் குறிப்பட்டனர்.
தடுப்பூசி குழந்தையைப் பாதுகாக்கும் என்று சிங்கப்பூர் மகப்பேறு மருத்துவர்கள் கல்லூரி, மகப்பேறு மருத்துவர்கள் சங்கம் இரண்டும் தெரிவித்தன.
கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகக்கூடிய கர்ப்பிணிகளுக்குத் தீவிர கண்காணிப்பு அல்லது செயற்கை சுவாச சிகிச்சை தேவைப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பது மற்ற நாடுகளில் நடந்துள்ள சோதனைகள் மூலம் தெரியவந்துள்ளதாக இந்தச் சங்கத்தின் தலைவர் டாக்டர் லிம் மின் யு தெரிவித்தார்.
இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது குறைப் பிரசவம் ஏற்பட்டு குழந்தைக்கும் தீவிர கண்காணிப்பு சிகிச்சை ஏற்படக்கூடிய ஆபத்து உண்டு. கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதற்கு இது ஒரு காரணம் என்று டாக்டர் லிம் கூறினார்.
தாய்ப்பாலில் தடுப்பூசி மருந்து கலக்காது என்பதால் தாய்ப்பால் கொடுக்கும் மாதர்களுக்கும் குழந்தைக்கும் தடுப்பூசி பாது காப்பானது என்று இந்த இரண்டு அமைப்புகளும் தெரிவித்துள்ளன.