சிங்கப்பூர் புறப்படுவதற்கு முன்னதாக 21 நாட்களுக்குள் சீனாவின் குவாங்டோங் மாநிலத்திற்குச் சென்று இருக்கும் குறுகிய கால பயணிகள் இங்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தத் தடை இன்று இரவு 11.59 மணி முதல் நடப்புக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் கொவிட்-19 தொற்று அதிகமாகி இருக்கிறது. அதனால் எல்லைக் கட்டுப்பாடு கடுமையாகி இருக்கிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இங்கு வருவதற்கு முன்னதாக 21 நாட்களுக்குள் குவாங்டோங் சென்று இருக்கும் சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள், நீண்ட கால அனுமதி உள்ளவர்கள் இங்கு தரை இறங்கியதும் தங்கள் வசிப்பிடத்தில் ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும்.
அவர்கள் இங்கு தரை இறங்கும்போது பிசிஆர் பரிசோதனைக்கு உட்படவேண்டும். தனிமைக் காலம் முடியும் போதும் அந்தச் சோதனையைச் செய்துகொள்ளவேண்டும்.
குவாங்டோங் போயிருப்போர் தவிர சீனாவில் இருந்து வருகின்ற இதர எல்லா பணிகளும் இங்கு தரை இறங்கும்போது தனிமை உத்தரவை நிறைவேற்றுவதற்குப் பதிலாக கொவிட்-19 பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டிய நிபந்தனை தொடரும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
குவாங்டோங் மாநிலத்தின் தலைநகரான குவாங்சூவில் சென்ற மாதம் முதல் தொற்று அதிகமாகி விட்டது. அதிக தொற்றுள்ள இடங்களில் சிலவற்றில் பரிசோதனைஇயக்கத்தை வேகப்படுத்தி அதன் மூலம் தொற்றைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் கடுமையாகப் பேராடி வருகிறார்கள்.
இதனிடையே, சிங்கப்பூரும் தென் கொரியாவும் இருதரப்பு விமானப் பயணத்தைத் தொடங்கும் வாய்ப்புகள் குறித்து கடந்த மார்ச் முதல் பேசி வருவதாகத் தெரியவந்துள்ளது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பயணத்துறைக்கு ஊக்கமூட்டும் வகையில் இதர நாடுகளுடன் இரு தரப்பு பயண ஏற்பாடுகளைச் செய்துகொள்ள தென் கொரிய அரசு முயலும் என்று அந்த நாட்டின் பிரதமர் ஹோங் நாம்- கி அண்மையில் தெரிவித்து இருந்தார்.
இத்தகைய பயண ஏற்பாட்டின் படி, கடுமையான தனிமை நிபந்தனைகள் இன்றி இரு நாட்டு அல்லது பல நாட்டு பயணிகள் பரஸ்பர பயணங்களை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

