முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி மக்களிடம் புரிந்துணர்வை மேம்படுத்த முயற்சி
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானது என்பது பற்றிய புரிந்துணர்வு மேம்பட உதவும் வகையில் மக்களுக்கு விளக்கம் அளிக்க நேற்று பொதுச் சுகாதாரத் தூதுவர் செயல்திட்டம் தொடங்கப்பட்டது.
சிங்கப்பூர் ரோட்டரி கிளப் அமைப்பும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சோ சுவீ ஹோக் பொதுச் சுகாதாரத் துறையும் நடைமுறைப்படுத்தும் அந்தத் திட்டம், இந்த இரண்டு அமைப்புகளின் ஏற்பாட்டில் நடந்த தடுப்பூசி தொடர்பான கருத்தரங்கில் தொடங்கப்பட்டது.
தடுப்பூசி தொடர்பான சரியான தகவல்களை மக்களுக்குத் தெரிவித்து, அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் அந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
வெவ்வேறு தடுப்பூசிகளின் செயல்பாடுகளுக்கு அதில் மருத் துவ நிபுணர்கள் விளக்கம் தந்தனர். கலாசார, சமூக, இளையர் மற்றும் வர்த்தக, தொழில் துணை அமைச்சர் திருவாட்டி லோ யென் லிங் அந்த மெய்நிகர் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.
தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களைச் சரிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை அமைச்சர் எடுத்துரைத்தார்.
சரியில்லாத, தவறான வழி காட்டுகின்ற தகவல்கள் சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி தடுப்பூசியை நினைத்து மக்கள் அச்சமடையக்கூடிய ஒரு நிலையை ஏற்படுத்தி விடுகின்றன. ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் அவர் தன்னையும் தன் அன்பர்களையும் பாதுகாத்துக்கொள்ள முடியுமென்றார் திருவாட்டி லோ.
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் அதைப் போட்டுக் கொள்ள முன்வரவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
கிடைக்கின்ற தகவல்கள் நம்பகமான தரப்பில் இருந்து வந்தவையா என்பதைச் சரிபார்த்த பிறகுதான் அவற்றைப் பகிர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
300 பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட நேற்றைய கருத்தரங்கை அடுத்து, சிங்கப்பூர் ரோட்டரி கிளப்பின் பங்காளித்துவ அமைப்புகளைச் சேர்ந்த ஏறத்தாழ 150 பேர் முதல் பயிற்சிப் பயிலரங்கில் பங்கெடுத்துக்கொண்டனர்.
தடுப்பூசியின் முக்கியத்துவம் பற்றி சமூகத்தினருக்கு எடுத்துக் கூற தேவைப்படும் தேர்ச்சிகள் அவர்களுக்குப் போதிக்கப்படும்.
பொதுமக்கள் கேட்கும் கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் பயிற்சி அளிப்பார்கள்.
மாணவர் தூதுவர்கள் செயல்திட்டம் ஒன்றைப் பற்றிய விவரங்கள் முடிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
"கொவிட்-19 கிருமித்தொற்று உடனடியாகப் போகாது. அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு மக்களுக்குத் தொடர்ந்து தடுப்பூசியின் முக்கியத்துவத்தை உணர்த்த இந்த நீடித்த விழிப்புணர்வுத் திட்டம் உதவும்," என்று சிங்கப்பூர் ரோட்டரி கிளப்பின் தொண்டூழியர் திரு நரசிம்மன் நாராயணன், 56, கூறினார்.

