உள்ளூர் விடுப்பில் பிரதமர் லீ
பிரதமர் லீ சியன் லூங் இன்று முதல் இம்மாதம் 11ஆம் தேதி வரை உள்ளூரில் விடுப்பில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் நேற்று அதன் அறிக்கையில் தெரிவித்தது. பிரதமர் உள்ளூரிலேயே இருப்பதால், இடைக்கால பிரதமர் யாரும் நியமிக்கப்படமாட்டார்கள் என்றது அறிக்கை.
உமறுப் புலவர் கல்வி உதவி அறங்காவல் நிதிக்கு பலர் விண்ணப்பம்
இக்கட்டான கொவிட்-19 சூழலிலும் உமறுப்புலவர் கல்வி உதவி அறங்காவல் நிதி அமைப்பு 37வது ஆண்டாக அதன் சேவையைத் தொடர்கிறது. கடந்த ஆண்டைவிட நான்கு மடங்கு அதாவது 28 மாணவர்கள் இந்நிதி உதவிக்கு விண்ணப்பம் செய்திருந்தனர்.
எனினும், $4,000 குடும்ப வருமான உச்சவரம்பு காரண மாக 10 வி்ண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 18 மாணவர்களுடன் ஸூம் தளம் வழி நேர்காணல் நடத்தப் பட்டது. சிங்கப்பூர் நிர்வாகக் கழகம், சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பயிலும் நால்வர், கப்லான், பிஎஸ்பி அகாடமி ஆகியவற்றில் பயிலும் இருவர் ஆகியோருக்கு தலா $3,000யும், பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் பயிலும் அறுவருக்கு தலா $2,000 முதல் $2,500யும், தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கு தலா $1,000யும் வழங்கப் பட்டது. இவை தவிர, ஒன்பது பேருக்கு ஊக்குவிப்புத் தொகையாக தலா $300 முதல் $500யும் சிண்டாவுக்கு $5,000 என மொத்தம் $41,900 வழங்கப்பட்டன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது ஆகப் பெரிய தொகை என்றும் தெரிவிக்கப்பட்டது.
நடமாட்டச் சாதனங்கள் தீப்பிடிக்க மின்கோளாறு முக்கிய காரணம்
தனிநபர் நடமாட்ட சாதனங்களில் மின்சாரக் கோளாறு ஏற்படுவதே அவை தீப்பிடிப்பதற்கு பல நேரங்களில் காரணமாய் இருப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் கடந்த வியாழக்கிழமை, மின்தூக்கிக்குள் தனிநபர் நடமாட்டச் சாதனம் தீப்பிடித்துக் கொண்டதைத் தொடர்ந்து 20 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்தார்.
தனிநபர் நடமாட்டச் சாதனங்களில் நம்பகத்தன்மை இல்லாத லித்தியம் அயோன் மின்கலன்களை அல்லது பொருத்தமற்ற மின்னூட்டியைப் பயன்படுத்துவது, சாதனங்களில் அளவுக்கு அதிகமாக மின்சாரம் ஏற்றுவது போன்றவற்றால் பேட்டரிகள் பழுது அடைந்து மின்சாரக் கோளாறு ஏற்படலாம் என்று கூறப்பட்டது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இயந்திரப் பொறியியல் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் பழனி பாலய்யா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அதனைக் கூறினார்.
மூவாண்டில் 190 கழக வீடுகளில் புதுப்பிப்பு வழிகாட்டிகள் மீறப்பட்டன
ஏறத்தாழ 190 வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளின் உரிமையாளர்களும் புதுப்பிப்புப் பணி குத்தகைக்காரர்களும் கழக விதிமுறைகளை மீறி, அனுமதியில்லாதப் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்டனர்.
கழகம் நேற்று இதனை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தது. 2018 முதல் 2020 வரை கழகம் சுமார் 38,000 வீடுகளில் நடத்திய சோதனைகளை நடத்தியது. சோதனைக்கு உள்ள வீடுகளில் 0.5%க்கும் குறைவான வீடுகளில்தான் வழிகாட்டி மீறல் நடந்தது.
சுவர்களை உடைப்பது, அனுமதிச் சான்றிதழ் பெறாமல் வீட்டைப் புதுப்பிப்பது, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பணிகளில் ஈடுபடுவது போன்றவை வழிகாட்டி மீறல்கள் என்றது கழகம்.
தடுப்பூசிகள் வரத்தைத் துரிதப்படுத்த ஏபெக் வர்த்தக அமைச்சர்கள் உறுதி
கொவிட்-19 தடுப்பூசிகளும் தொற்று தொடர்பிலான எல்லாப் பொருட்களும் துரிதமாக ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு அனுப்புவதைத் துரிதப்படுத்தவும் அவை தடையின்றி செல்ல ஏற்பாடு செய்யவும் ஏபெக் அமைப்பு உறுதி தந்துள்ளது.
அதில் உள்ள 21 ஆசிய பசிஃபிக் நாடுகளின் வர்த்தக அமைச்சர்களும் அதன் தொடர்பில் கூட்டறிக்கை விடுத்தனர். அவர்கள் நடத்திய சந்திப்பில் கலந்துகொண்ட சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சர் திரு கான் கிம் யோ,ங் வட்டாரப் பொருளியல் மீட்சிக்கு உதவ கூட்டாகச் செயல்படும்படி ஏபெக் நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

