கொவிட்-19 தடுப்பூசிக்கு எதிராக மற்றவர்களுடன் மருத்துவர்களும் பரப்பி வரும் தவறான தகவல்களை மூத்த தொற்றுநோய் சிறப்பு வல்லு நரான இணைப் பேராசிரியர் டேவிட் லை மறுத்து விளக்கம் அளித்து இருக்கிறார்.
தேசிய தொற்றுநோய் நிலையத்தின் மருந்தக ஆய்வாளரான இணைப் பேராசிரியர், 'இந்தத் தொற்றுக் காலத்தில் போலியான அறிவியல் தகவல்களும் தடுப்பூசிக்கு எதிரான குழுக்களும் ஏன் ஆபத்தானவை' என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் விளக்கமளித்தார்.
புழங்கி வரும் சில தகவல்களும் கருத்துகளும் பல நாட்களாக தன் தூக்கத்தைக் கெடுத்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவற்றைச் சரிப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாகக் கூறினார்.
டாக்டர் பால் ஐ டபிள்யூ யாங், தனியார் புற்றுநோய் வல்லுநரான டாக்டர் ஊன் சோங் ஜின் ஆகியோர் உள்ளிட்ட மருத்துவர்கள் குழு ஒன்றும் அந்தக் கருத்துகளில் சிலவற்றை வெளியிட்டுள்ளதாகஇணைப் பேராசிரியர் தெரிவித்தார்.
சமூகத்தில் நல்ல மதிப்புள்ள அந்த மருத்துவர்களின் ஆலோசனைகள் கொவிட்-19 தடுப்பூசியை பொதுமக்கள் தவிர்த்துவிடும்படி செய்துவிடும் என்றார் அவர்.
மருத்துவர்கள் 12 பேர் சென்ற மாதம் பகிரங்கக் கடிதம் ஒன்றை வெளியிட்டனர். அவர்களில் 11 பேர் பிறகு பின்வாங்கிவிட்டனர்.
சீனத் தயாரிப்பான சினோவேக் தடுப்பூசி மருந்தை இங்கு சிறார்களுக்குப் போட அனுமதிக்கும்படி அந்தக் கடிதம் அரசாங்கத்தை வலியுறுத்தியது.
வழிவழியாக கிருமிகளைக் கொல்லும் தடுப்பூசி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சினோவேக் பாதுகாப்பானது என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஃபைசர் பயோஎன்டெக், மொடர்னா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டோருக்குப் பிறகு 10 முதல் 20 ஆண்டுகளில் என்னென்ன வேண்டாத விளைவுகள் எல்லாம் ஏற்படலாம் என்பது தெரியவில்லை என்று அந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்தக் கருத்தை மறுத்த இணைப் பேராசிரியர், ஃபைசர் பயோஎன்டெக், மொடர்னா தடுப்பூசிகள் கொவிட்-10 கிருமத்தொற்றைத் தடுப்பதில் ஆற்றல்மிக்கவை என்று விளக்கினார்.
உருமாறிய கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு சினோவேக் நல்ல பலன் தரும் என்பதற்குத் திடமான ஆதாரம் இல்லை என்றார் இணைப் பேராசிரியர்.
ஃபைசர் பயோஎன்டெக், மொடர்னா தடுப்பூசிகளைவிட சினோவேக் சிறந்தது என்று அந்த மருத்துவர்கள் கூறினாலும் அதை உறுதிப்படுத்த போதிய ஆதாரங்கள் இல்லை என்றார் அவர்.

