சட்டவிரோத சுகாதாரப் பொருள்கள் தொடர்பான 3,200க்கும் அதிகமான பட்டியல்களை உள்ளூர் மின்வணிகத் தளங்களில் இருந்து அதிகாரிகள் அகற்றினர்.
இவ்வாண்டு ஜனவரியில் இருந்து மே வரை அந்தப் பொருட்பட்டியல் அகற்றப்பட்டதாக சுகாதார அறிவியல் ஆணையம் ஓர் அறிக்கை வழியாக நேற்று தெரிவித்தது.
அவ்வாறு அகற்றப்பட்ட பட்டியல்களில், உயர் ரத்த அழுத்த, நீரிழிவு போன்ற நாட்பட்ட உடல்நலப் பிரச்சினைகள், கொழுப்பைக் கட்டுப்படுத்துவதற்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளும் அடங்கும்.
"அவை பெரும்பாலும் தனிப்பட்ட ஒருவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்தில் மிஞ்சியவை அல்லது பயன்படுத்தப்படாதவை. மருத்துவர்களால் மட்டுமே அவற்றைப் பரிந்துரைக்க முடியும் என்ற தகவலைத் தாங்கள் அறிந்திருக்கவில்லை என்று அவற்றின் விற்பனையாளர்கள் கூறினர்," என்று ஆணையம் விளக்கியது. பெரும்பான்மையோர் முதன்முறை விற்பனையாளர்கள் என்றும் அது குறிப்பிட்டது.
விற்பனையாளர்கள் எச்சரிக்கப்பட்டதுடன், ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்கி நடக்குமாறும் நினைவுறுத்தப்பட்டனர்.
சுகாதாரப் பொருள்களை இணையம் வழியாக வாங்கும்போது கவனமாக இருக்குமாறும் பெயர்பெற்ற சில்லறை விற்பனை இணையத்தளங்கள் வழியாக மட்டும் வாங்குமாறும் ஆணையம் பொதுமக்களை வலியுறுத்தி இருக்கிறது.
சட்டவிரோத, போலி அல்லது சந்தேகத்திற்குரிய சுகாதாரப் பொருள்கள் குறித்து 6866-3485 என்ற எண் அல்லது hsa_is@hsa.gov.sg எனும் மின்னஞ்சல் மூலம் ஆணையத்தின் அமலாக்கப் பிரிவிடம் தகவல் தெரிவிக்கலாம்.