வருடாந்திர குர்பான் சடங்கிற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ஆகஸ்ட் மாத நடுப்பகுதிவரை விநியோகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளைப் பலிகொடுத்து, அவற்றின் இறைச்சி, வழிபாட்டாளர்களுக்கும் தேவைப்படுவோர்க்கும் விநியோகிக்கப்படும்.
சமூகத்தில் கொவிட்-19 பரவி வருவதை அடுத்து, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பள்ளிவாசல்கள் ஆஸ்திரேலியாவில் கால்நடைகளைப் பலிகொடுத்து, அங்கிருந்து இறைச்சியைக் கொண்டுவர ஏற்பாடு செய்யும்.
இவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட குர்பான் சடங்கு இவ்வாண்டு 51 பள்ளிவாசல்களில் இடம்பெறும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு பள்ளிவாசலில் 120 செம்மறி ஆடுகள்வரை வழங்கலாம். அவற்றின் விலை $320லிருந்து $370 வரை.
ஜூலை மாதம் 13ஆம் தேதியுடன் முன்பதிவு முடிவடையும். முதலில் வருவோர்க்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
குர்பான் சடங்கை மேற்கொள்ள விரும்புவோர், பங்கேற்கும் பள்ளிவாசல்களின் இணையத்தளங்களுக்குச் சென்று பதிவுசெய்து, நேரடியாகக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளுக்கு இணங்கும் விதமாக, நேரடியாகச் சென்று முன்பதிவு செய்ய விரும்புவோர் அதற்கு முன்அனுமதி பெற வேண்டும்.