எஸ்எம்ஆர்டி ஊழியர் பணியிடத்தில் மரணம்

எஸ்எம்ஆர்டி ஊழியர் பணியிடத்தில் மரணம்

1 mins read
89a6933e-ab9f-476b-88df-0c0e47324d9d
எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் அங் மோ கியோ பணிமனை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிற்றுந்து ஒன்றைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது அதனை உயர்த்தி வைக்கும் கார் ஜாக்கி கீழே விழுந்து ஏற்பட்ட விபத்தில் எஸ்எம்ஆர்டி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இன்னொருவருக்கு காயம் ஏற்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்து நேர்ந்தது.

அங் மோ கியோ ஸ்திரீட் 62ல், அதாவது எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் அங் மோ கியோ பணிமனை முகவரியிலிருந்து உதவி கேட்டு ஜூன் 6ம் தேதி காலை 9.40 மணிக்குத் தங்களுக்கு அழைப்பு வந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

சுயநினைவிழந்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்ட 43 வயது ஆடவர் பின்னர் காயங்கள் காரணமாக உயிரிழந்ததாக எஸ்எம்ஆர்டி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், சுயநினைவுடன் இருந்த 44 வயது ஆடவர் ஒருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தொழில்நுட்பர்கள் இருவரும் கூ டெக் புவாட் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. ஒருவருக்கு தலையில் பலத்த காயம். மற்றவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டிருந்தது.

காயமுற்ற ஊழியர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அவர் மருத்துவ விடுப்பில் இருக்கிறார்.

உயிரிழந்த ஊழியரின் குடும்பத்துக்கு எஸ்எம்ஆர்டி உதவியும் ஆதரவும் வழங்கி வருவதாக நிறுவனத்தின் வாகனச் சேவைத் துறையின் பொது நிர்வாகி திரு பிவி வெங்கடேசன் தெரிவித்தார். அங் மோ கியோ கிடங்கில் உள்ள வர்த்தக வாகனங்களுக்கான பழுதுபார்ப்புப் பிரிவுக்கு வேலை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்