சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி மேலும் நால்வருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதன் மூலம் சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 62,223ஆக அதிகரித்துள்ளது.
சமூக அளவில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதிக்குப் பிறகு இதுவே ஆகக் குறைவான சமூக அளவிலான பாதிப்பு.
சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்கு ஏற்கெனவே கிருமித்தொற்று ஏற்பட்டோருக்கும் தொடர்பு இல்லை. மற்றொருவர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர். அவர் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு ஊழியர்கள் தங்கு விடுதிகளில் புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று ஏற்படவில்லை. வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இருவருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது. சிங்கப்பூர் வந்ததும் அவர்களுக்கு இல்லத் தனிமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருவரும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பிய சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்.
இதற்கிடையே, டான் டோக் செங் கொவிட்-19 கிருமித்தொற்று குழுமத்தைச் சேர்ந்த 86 வயது சிங்கப்பூர் மூதாட்டி கடந்த திங்கட்கிழமையன்று உயிரிழந்தார். இதன்மூலம் கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் மாண்டோர் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.
அந்த மூதாட்டி வேறு ஒரு நோய் காரணமாக கூ டெக் புவாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கணவர் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை டான் டோக் செங் மருத்துவமனையின் 9D வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மாண்ட மூதாட்டி ஏற்கெனவே நீரிழிவு நோய், உயர் ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம் முதலியவற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக அமைச்சு தெரிவித்தது. அவருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியன்று உறுதி செய்யப்பட்டது. மாண்ட மூதாட்டியின் குடும்பத்துக்குத் தேவையான உதவியை கூ டெக் புவாட் மருத்துவமனை செய்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதுவே டான் டோக் செங் கொவிட்-19 குழுமத்துடன் தொடர்பான மூன்றாவது உயிரிழப்பு. இதற்கு முன்பு மே 1ஆம் தேதியன்று 88 வயது சிங்கப்பூர் மூதாட்டி ஒருவரும் மே 20ஆம் தேதியன்று 70 வயது சிங்கப்பூர் ஆடவரும் மாண்டனர்.
கடந்த 28 நாட்களாக புதிதாக யாருக்கும் கொவிட்-19 பாதிப்பு ஏற்படாததால் டான் டோக் செங் மருத்துவமனையில் கொவிட்-19 கிருமித்தொற்று பாதிப்பு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

