செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
e859144f-8806-46c2-b36c-da06cffc688e
-

சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான பரிசோதனை முறை மேம்பாடு

சிறப்புத் தேவைகளுடையோருக்கான கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை முறை மற்றும் தனிமைப்படுத்தும் முறையை சுகாதார அமைச்சு மேம்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக நடத்தப்படும் கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை முறையால் சிறப்புத் தேவைகளுடையோர் மனதளவில் பாதிக்கப்படுவதாக அவர்களைப் பராமரிப்பவர்கள் தெரிவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 மருத்துவப் பரிசோதனையைச் செய்யும் சுகாதாரப் பராமரிப்பாளர்களுக்கு சிறப்புத் தேவைகளுடையோருக்குப் பரிசோதனை நடத்தும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்று சுகாதார அமைச்சுக்கான நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டார்.

சிறப்புத் தேவைகளுடையோரைத் தனிமைப்படுத்தும் முறை வழக்கமான முறையைவிட மேலும் சுமுகமானதாக இருக்கும் என்று சுகாதார அமைச்சு கூறியது.

இந்நிலையில், உடற்குறையுள்ளோருக்காக சிறப்பு கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான கொவிட்-19 மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள முடியாத உடற்குறையுள்ளோரின் பாதுகாப்புக்கு எவ்வித குறைபாடும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அக்கறை தெரிவித்துள்ளனர்.

உதாரணத்துக்கு வழக்கமான கொவிட்-19 மருத்துவப் பரிசோதனைக்குப் பதிலாக அவர்களுக்கு மூச்சு அல்லது எச்சில் மூலம் பரிசோதனை நடத்தப்படலாம் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கான தடுப்பூசித் திட்டம் துவக்கம்

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவதை கேகே மகளிர், சிறார் மருத்துவமனை நேற்று முன்தினம் தொடங்கியது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள கர்ப்பிணிப் பெண்கள் இம்மாதம் 4ஆம் தேதியிலிருந்து முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.

ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மொடர்னா தடுப்பூசி மருந்தால் கர்ப்பிணிப் பெண்கள் அல்லது வயிற்றில் இருக்கும் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று அமைச்சு கூறியது. இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்து கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும் என்று ஊக்குவிக்கப்படுகிறது.

கடும் ஒவ்வாமை உள்ளோருக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு

கடும் ஒவ்வாமை உள்ள 30,000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கூடிய விரைவில் அவர்கள் அதற்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று முன்தினம் தெரிவித்தார்.

இதுவரை மூத்தோரில் 75 விழுக்காட்டினரும் ஓ நிலை, ஏ நிலைத் தேர்வு எழுதும் மாணவர்களில் 90 விழுக்காட்டினரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக திரு ஓங் கூறினார்.

சிங்கப்பூரில் கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர பொதுமக்களின் கூட்டு முயற்சியை அமைச்சர் ஓங் பாராட்டினார்.