சிங்கப்பூர் நாணய ஆணையம் பருவநிலை தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்வதற்காக 1.8 பில்லியன் அமெரிக்க டாலரை (2.38 பில்லியன் வெள்ளி) ஐந்து முதலீட்டு நிர்வாக அமைப்புகளிடம் ஒப்படைத்துள்ளது.
அதனைக் கொண்டு அந்நிர்வாகிகள் ஆசிய ஃபசிபிக் வட்டாரத்துக்கான நீடித்த நிலைத்தன்மை மையங்களை இங்கு அமைப்பதுடன் இங்குள்ள நிறுவனங்கள் தங்கள் பசுமை செயல்பாடுகளை மேம்படுத்த அவை வழிகாட்டுவார்கள்.
சிங்கப்பூர் நாணய ஆணையம் நேற்று வெளியிட்ட முதல் நீடித்த நிலைத்தன்மை அறிக்கையில் இதனைத் தெரிவித்திருந்தார் ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் திரு ரவி மேனன்.
மேலும், நிறுவனங்கள் அதன் நீடித்த நிலைத்தன்மை செயல்பாடு களைக் கட்டாயம் வெளியிடவேண்டும் எனும் விதிமுறையைப் பற்றி சிங்கப்பூர் நாணய ஆணையம் நிதித் துறையினரிடம் இவ்வாண்டு கருத்துக் கேட்கும். குறிப்பாக அந்த விதிமுறைகளை உலகத் தரத்துக்கு ஏற்ற சட்டவிதிமுறைகளாக மாற்றுவது பற்றி கலந்து ஆலோசிக்கப்படும்.
கரியமிலத்தைக் குறைவாக வெளியேற்றும் பொருளியலாக சிங்கப்பூர் ஒழுங்குமுறைடன் மாறு வதற்கு உதவும் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் திட்டங்களில் அவை அடங்கும்.
ஒப்படைக்கப்பட்ட தொகையைக் கொண்டு ஐந்து சொத்து நிர்வாகிகளும் இந்த வட்டாரத்தில் நீடித்த நிலைத்தன்மை தொடர்பான முயற்சிகளை முன்னெடுப்பர்.
சுற்றுச்சூழல், சமூகம், ஆட்சிமுறை சார்ந்த நிதிகளை அவை தொடங்குவதுடன், பயிற்சித் திட்டங்களின் வழி பருவநிலைக்கு ஏதுவான நிதித் துறையில் ஆற்றல்களையும் அவர்கள் உயர்த்துவர்.
மேலும், பருவநிலைக்கு ஏதுவான நிதித்துறையில் இந்த வட்டாரத்துக்கு ஏற்ற ஆழமான ஆய்வு களைச் மேற்கொள்வதுடன் பருவநிலைக்கு ஏதுவான துறைகளில் நிதித் தொழில்நுட்பங்கள் குறித்தும் ஆராயப்படும்.
சொத்து நிர்வாகிகள், தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் சொத்துகளை நிர்வகிப்பவர்கள்.
ஐந்து சொத்து நிர்வாகிகளும் அடுத்த சில மாதங்களில் இங்கு தங்கள் ஆசிய ஃபசிபிக் வட்டார மையங்களை அமைத்துவிடுவர் என்று எதிர்பார்ப்பதாக திரு மேனன் கூறினார்.
அத்துடன், பருவநிலை தொடர்பான விவரங்களை வெளியிடு வதற்கான ஒரே, சீரான தரம் இல்லாததால் நிறுவனங்கள் வெவ்வேறு கட்டமைப்புகளைப் பின்பற்றி விவரங்களை வெளியிடுகின்றன.
அதனால் உலக அளவில் நீடித்த நிலைத்தன்மைக்கான நிதியின் வளர்ச்சி தடைபட்டிருப்பதாக திரு மேனன் தெரிவித்தார்.
நிறுவனங்கள் பருவநிலை தொடர்பான விவரங்களை வெளியிடும் முறையின் தரத்தையும் ஒழுங்குமுறையையும் மேம்படுத்த அவசரத் தேவை இருப்பதாகச் சொன்னார் திரு ரவி மேனன்.

