இணைய வர்த்தகம் ஒன்றின் சேமிப்புக் கிடங்கு ஊழியராக வேலை பார்த்து வந்த ஒருவர் தம்மை வேலையைவிட்டுத் தூக்கியதால் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டார்.
இதில் ஒருவர் மரணமடைந்தார், மற்றொருவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன.
யீ ஜிங் மான் என்ற அந்த ஊழியர் மூன்றாவது இயக்குநர் மீது தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், அவர் சீனப் புத்தாண்டிற்காக கொடுத்த $20யுடன் கூடிய சிவப்பு அன்பளிப்புப் பையை சாப்பிட வைத்தார்.
இதன் பின்னர், அந்த அலுவலக நுழைவாயிலில் மேசைகள், நாற்காலிகளுடன் கூடிய தடுப்பு ஒன்றை ஏற்படுத்தி தான் கையில் வைத்திருந்த இறைச்சி வெட்டப் பயன்படுத்தும் கத்தியைக் காண்பித்து எவரும் தம்மை நெருங்காதவாறு மிரட்டினார்.
சுங்கை காடுட்டில் உள்ள ஜி ஜி எனப் பெயர் கொண்ட அந்த இணைய வர்த்தக நிறுவனத்தில் 2019ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி யீ தமது முதலாளிகள் மீது மேற்கூறப்பட்ட தாக்குதலை நடத்தினார்.
யீக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் திரு லின் ஸின்ஜி, வயது 29, என்பவருக்கு மரணம் விளைவித்த குற்றம், திரு லி மிங்யியாவ், 30, என்பவருக்கு ஆபத்தான ஆயுதம் கொண்டு கடும் காயம் விைளவித்தது ஆகிய குற்றச்சாட்டுகளை ஒப்புக்ெகாண்டார். அவர்கள் இருவரும் அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இவற்றுடன் தண்டனை விதிப்பின் போது மேலும் எட்டுக் குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன. அதில் ஒன்று மற்றோர் இயக்குநரான ரயன் பான்சாய் ஸிங் என்பவரை மிரட்டியது, நால்வரை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
யீ கைது செய்யப்பட்ட பின் அவருக்கு கடுமையான உளவியல் கோளாறு இருப்பது தெரியவந்தது. அதனால் அவர் தனது செயல் களுக்குப் பொறுப்பேற்கும் சக்தியை பெருமளவில் இழந்தார் என்றும் நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.அந்த நிறுவனத்தில் யீ 2017ஆம் ஆண்டு வேலைக்குச் சேர்ந்தார் என்றும் அவர் முதலில் நன்கு பணிபுரிந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்ட மேலாளர் பதவியை யீ நிராகரித்தார். அதற்குக் காரணம் அதனால் வரக்கூடிய கூடுதல் பணிச்சுமை தமக்கு வேலையில் நெருக்குதலைத் தரும் என அவர் நினைத்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து யீ தமது பணியைச் சரிவர செய்யவில்லை என்றும் அவருடைய முதலாளிகள் மீது குறைகாண ஆரம்பித்தார் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

