வரும் வாரங்களில் கொவிட்-19 பரவல் கட்டுக்குள் இருக்கும் பட்சத்தில், உடற்பயிற்சிக்கூடங்களும் உடற்தகுதி நிலையங்களும் முகக்கவசமின்றி உள்ளரங்கு நடவடிக்கைகளை இம்மாதம் 21ஆம் தேதியில் இருந்து மீண்டும் தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில், தனிமனிதர்களுக்கு இடையே குறைந்தது இரண்டு மீட்டர் இடைவெளி அல்லது ஐவர் வரையிலான குழுவினர்க்கு இடையே குறைந்தது மூன்று மீட்டர் இடைவெளி போன்ற பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் அங்கு நடைமுறையில் இருக்க வேண்டும்.
ஐவர் அடங்கிய பல குழுக்கள் இடம்பெறும் உட்புற, வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளையும் அவை மேற்கொள்ளலாம். ஆயினும், அந்நடவடிக்கைகளில் பயிற்றுவிப்பாளர் உட்பட அதிகபட்சம் 30 பேர்தான் பங்கேற்க வேண்டும்.
கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் பங்கேற்பாளர்கள் முகக்கவசத்தை அகற்றிவிடலாம். ஆயினும், சாத்தியமிருந்தால் அவர்கள் முகக்கவசம் அணிந்து நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
உடற்பயிற்சிக்கூடங்களிலும் உடற்தகுதி நிலையங்களிலும் உள்ளரங்கு நடவடிக்கைகள் தொடங்கும்போது, அவற்றின் பணியாளர்கள் அவ்வப்போது கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
நிகழ்ச்சிக்குமுன் பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்றால், 250 பேர்வரை பங்கேற்கும் பெரிய அளவிலான விளையாட்டு நிகழ்ச்சிகளும் இம்மாதம் 21ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படலாம். நிகழ்ச்சிக்குமுன் பரிசோதனை செய்துகொள்ளாவிடில், அதிகபட்சம் 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
வரும் 14ஆம் தேதி திங்கட்கிழமை முதல், சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்து போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரில் கண்டுகளிக்கப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.

