உணவு, பான நிலையங்களில் இம்மாதம் 20ஆம் தேதிவரை அமர்ந்து உண்ண முடியாது. இதுபோன்று மேலும் ஒரு வார காலத்திற்குக் கட்டுப்பாடுகளுடன் செயல்பட வேண்டியிருக்கும் துறைகளுக்காக மேம்படுத்தப்பட்ட வேலை ஆதரவுத் திட்டம் நீட்டிக்கப்பட உள்ளது.
அத்துறைகளுக்கு இம்மாதம் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை, வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் 10% நிதியாதரவு கிடைக்கும்.
அத்திட்டத்தின்கீழ், ஒவ்வோர் உள்ளூர் ஊழியரின் மொத்த மாத ஊதியத்தின் முதல் 4,600 வெள்ளியில் குறிப்பிட்ட விழுக்காட்டை அரசாங்கம் வழங்கி வருகிறது.
கடந்த மே 16ஆம் தேதியில் இருந்து இம்மாதம் 13ஆம் தேதி வரைக்கும், உணவு, பானத் துறைக்கு வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் நிதி ஆதரவு 10 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டு இருக்கிறது.
நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ள உடற்பயிற்சிக்கூடங்கள், உடற்தகுதி நிலையங்கள், மேடைக் கலை நிறுவனங்கள், கலைக் கல்வி மையங்கள் ஆகியவற்றுக்கும் இதுபோன்று மேம்படுத்தப்பட்ட வேலை ஆதரவுத் திட்டத்தின்கீழ் உதவி வழங்கப்பட்டது.
கூடுதல் கட்டுப்பாடுகள் காரணமாக அவை தங்களது பல நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டியதாகிவிட்டது.
இதற்கிடையே, டாக்சி, தனியார் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கான கொவிட்-19 ஓட்டுநர் நிவாரண நிதியை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு வாகனத்திற்கு ஜூலையிலும் ஆகஸ்ட்டிலும் 300 வெள்ளியும் செப்டம்பரில் 150 வெள்ளியும் வழங்கப்படும். அதாவது, முதல் இரு மாதங்களில் நாளொன்றுக்கு பத்து வெள்ளியும் செப்டம்பரில் நாளொன்றுக்கு ஐந்து வெள்ளியும் வழங்கப்படும்.
இதற்காகக் கூடுதலாக $40 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பயன்பெறுவர் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

