செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
8058d1b9-4f9f-4632-854d-ef4e3a61ae0f
-

அமைச்சர் கான்: நோய்க்கிருமிக்கு

இனம், சமயம், மொழி தெரியாது

சிங்கப்பூரின் பல்லினக் கலாசாரத்தை மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை அண்மைய இனவாத சம்பவங்கள் நினைவுபடுத்துவதாக வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார். கொவிட்-19 பரவல் சார்ந்த மனஅழுத்தங்களால் சில வேளைகளில் இதுபோன்ற உரசல்களால் ஏற்படலாம் என்ற அவர், தாங்கள் பல்லினச் சமூகத்தில் வாழ்கிறோம் என்பதை நினைவில் கொண்டு, பிணைப்பை வலுப்படுத்தத் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று சிங்கப்பூரர்களை அவர் வலியுறுத்தினார். "அது ஒரு தடுப்பூசி போன்றது. இன எதிர்ப்பு உணர்வுகளுக்கு எதிரான தடுப்பூசி. தொடர்ந்து அனைவரும் இணைந்து பணியாற்றுவது அவசியம். அடிப்படையில், கிருமிக்கு இனமோ சமயமோ மொழியோ தெரியாது," என்றார் திரு கான். இனவாத சம்பவங்கள் குறித்தும் அவற்றுக்கு கொரோனா பரவல் எவ்வகையில் காரணமாகக்கூடும் என்றும் நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ் முரசு கேட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். "ஒவ்வொரு முறை இனவாத சம்பவம் நிகழும்போதும், 'அது நம்மைப் பிரதிநிதிக்கவில்லை' எனும் நிலைப்பாட்டை நாம் எடுக்க வேண்டும். இனவாத, இனவெறுப்பு நடவடிக்கைகளை நாம் பொறுத்தருளக்கூடாது," என்றார் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங். இந்த நோய்ப் பரவல் காலகட்டத்தில், இனம், சமயம் பாராது பலரும் உதவி தேவைப்படுவோர்க்குக் கைகொடுத்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். சிங்கப்பூரர்கள் வேற்றுமைகளை மறந்து, ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை கொள்வதே, சமூகம் எந்த ஒரு நெருக்கடியையும் எதிர்த்துப் போராட 'மிக முக்கியமான ஆன்டிபாடி' என்றார் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.

ஹவ்காங்கில் ஒரே வகை கிருமி

புளோக் 506 ஹவ்காங் அவென்யூ 8 கிருமித்தொற்றுக் குழுமத்திற்குக் காரணமான கொவிட்-19 கிருமியும் அதன் அருகில் உள்ள மற்ற புளோக்குகளில் கண்டறியப்பட்ட கிருமியும் ஒன்றே என்று சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்துள்ளார். இது, தொடக்கத்தில் சிலரைக் கிருமி தொற்றி, பின்னர் மின்தூக்கிகள், படிக்கட்டுகள் போன்ற பொதுவான பகுதிகள் வழியாக கொரோனா பரவி இருக்கலாம் என்பதைக் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். அவ்வட்டாரத்தில் எவ்வாறு கிருமி பரவியது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.