பாதுகாப்பான முறையில் சிங்கப்பூர் உள்ளூர் சமூகத்தைத் திறந்துவிடுவதும் பொருளியலை மீண்டும் செயல்பட வைப்பதும் அரசாங்கத்தின் உடனடி முன்னுரிமை என்றும் அதற்குப் பிறகே எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடியும் என்றும் வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சூழ்நிலை நிலையாக ஆனதற்குப் பிறகுதான் எல்லைக் கட்டுப்பாடுகளை எப்படி தளர்த்துவது என்பது பற்றி சிங்கப்பூர் யோசிக்கத் தேவையான சூழ்நிலை இருக்கும் என்றார் அவர்.
பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் தலைவர்களில் ஒருவரான திரு கான், நேற்று மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.
சிங்கப்பூரைத் தங்கள் தாயகமாகக் குறிப்பிடுகின்ற ஆனால் இப்போது வெளிநாடுகளில் வசிக்கின்ற வெளிநாட்டினர் இங்கு திரும்ப வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டபோது, அவர்கள் சிங்கப்பூருக்குத் திரும்பும் வெளிநாட்டினர் என்பதையும் அவர்கள் இங்கு தங்கி இருந்து பல ஆண்டுகளாக வேலை பார்த்தவர்கள் என்பதையும் மனதில் கொண்டு தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாடுகளை மறுபரிசீலனை செய்துவருகிறோம் என்றார்.
அடுத்த இரண்டு வாரங்களில் உள்ளூர் சமூகத்தைத் திறந்து விடுவதும் பொருளியலை மீண்டும் செயல்பட வைப்பதும் சமூகத்தில் அதிக மக்கள் கலந்துறவாடுவதை,உணவகங்களில் சாப்பிடுவதை அனுமதிப்பதும் ஒருமித்த கவனம் செலுத்தப்படும் அம்சங்களாக இருக்கும் என்று வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறினார்.

