வெறுப்புணர்வையும் பேராதிக்க உணர்வையும் வெளிப்படுத்தி இருக்கும் அண்மைய சம்பவங்கள் அரும்பாடுபட்டு நாம் சாதித்து இருக்கும் பிணைப்புமிக்க சமூகத்தின் மீது சிங்கப்பூர் கொண்டுள்ள நம்பிக்கையை அசைத்து இருப்பதாக அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்து இருக்கிறார்.
அத்தகைய சம்பவங்கள் ஒரு நேர சம்பவங்களா அல்லது பெரிய பிரச்சினையின் பிரதிபலிப்பா என்ற ஓர் ஐயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதிபர் கூறினார்.
சிங்கப்பூரர்கள் ஒருவர் மற்றொரு வருக்கு எதிராக அத்தகைய உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பதாகத் தெரிவிக்கும் செய்திகள் கவலை தருவதாக ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள அதிபர், அத்தகைய செயல்கள் மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதுபோன்ற தப்பெண்ணங்கள் நம் இளையர்களைப் பாதித்து அவர்களின் மனதில் எந்த அளவுக்கு இடம் பிடிக்கும் என்பதே ஆகப் பெரிய அச்சமாக இருப்பதாகவும் அதிபர் கூறினார்.
சட்டம் மட்டுமே அதுபோன்ற செயல் களைத் தடுத்துவிட முடியாது என்று தெரிவித்த அதிபர், சமூகப் பிணைப்பின் முக்கியத்துவத்தில் அதிக கவனம், ஈடுபாடு கொள்வதற்கான நேரம் இது என்றார். அதோடு, உண்மையான பல இன, பல சமய சமூகத்தைச் சாதிப்பது எப்படி என்பதிலும் இப்போது கவனமும் ஈடுபாடும் இடம்பெற வேண்டும் என்று திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
இந்த நடைமுறையில் நம்மைப் பற்றியும் நம் நம்பிக்கைகள் குறித்தும் மிகவும் வலியை ஏற்படுத்தக்கூடிய உண்மை நிலவரங்களை எதிர்கொள்ள, அவற்றை மீண்டும் மதிப்பிட வேண்டி இருக்கலாம் என்று தெரிவித்த அதிபர், இது மனதிற்குப் பிடிக்காத ஒன்றாக இருக்கக்கூடும் என்றார்.
ஆனாலும் ஒவ்வொரு சிங்கப்பூரரும் இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது என்று தான் கருதுவதாக அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகப் பயனீடும் இப்போதைய கொவிட்-19 சூழலும் உண்மையான பிரச்சினைகளை மறைத்துவிடக்கூடிய அம்சங்களாக இருப்பதாகவும் திருவாட்டி ஹலிமா தெரிவித்து உள்ளார்.
கலப்பு இன ஜோடியைப் பார்த்து சீன ஆடவர் ஒருவர் இனவாத கருத்துகளைத் தெரிவித்ததைக் காட்டும் ஒரு காணொளி சென்ற வாரம் தலைகாட்டியது.
ஃபேஸ்புக் புழங்கியான லிவனேஷ் ராமு என்பவர் கடந்த புதன்கிழமை காணொளி ஒன்றைப் பதிவேற்றினார். ஆடவர் ஒருவர் தன் வீட்டின் வாயிலில் வழக்கமான இந்து சமய தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்,
பின்னணியில் சீனப் பெண்மணி போல் தோன்றிய ஒருவர் காழ்ப்புணர்வுடன் உலோக வட்டு ஒன்றைத் திரும்பத்திரும்ப தட்டி ஒலி எழுப்பிக்கொண்டு இருந்த தாகத் தெரிந்தது.
சிங்கப்பூர் போலிஸ் அந்தக் குடும்பத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக அந்த ஃபேஸ்புக் பதிவில் பிறகு தகவல் இடம்பெற்றது.
சிங்கப்பூரில் அண்மையில் நிகழ்ந்துள்ள இத்தகைய சில சம்பவங்கள் பரவலாக கவனத்தை ஈர்த்துள்ளன. பொதுமக்களிடையே, அமைச்சர்களிடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே விவாதத்தைக் கிளப்பிவிட்டுள்ளன.
அதிபரின் யோசனையின் பேரில் 2019ல் பல சமயங்களுக்கு இடையில் முதல்முறையாக உயர்நிலை கருத்தரங்கம் ஒன்று சிங்கப்பூரில் நடந்தது. அதில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த 1,100 பேருக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
அந்தக் கருத்தரங்கினை அதிபர் நினைவுகூர்ந்தார். உணர்வுப்பூர்வமான ஓர் அம்சம் தொடர்பான கருத்தரங்கை அனைத்துலக பிரமுகர்களைக் கூட்டி நடத்துவது விவேகமாக இருக்குமா என்று தொடக்கத்தில் ஓர் எண்ணம் ஏற்பட்டது.
ஆனால் பிணைப்புமிக்க சமூகங்களுக்கு இன, சமய மிரட்டல்கள் எப்போதுமே இருந்துவரும் என்றும் அதேவேளையில் பொருள் பொதிந்த வழிகளில் நடக்கும் விவாதிப்புகள் காரணமாக பாதகங்களைவிட சாதகங்களே அதிகமாக இருக்கும் என்றும் தான் நம்பியதாக அதிபர் குறிப்பிட்டார்.
இன, சமூக நல்லிணக்கத்திற்கு நூற்றுக்கு நூறு நிறைவான, முழுமையான முன்மாதிரி என்று சிங்கப்பூர் தன்னைக் கூறிக்கொள்வதில்லை என்று குறிப்பிட்ட அதிபர், வெறுப்புணர்வும் அவநம்பிக்கையும் பிளவுகளை ஏற்படுத்திவிடாமல் தடுக்க சிங்கப்பூர் பாடுபடுவதாகக் குறிப்பிட்டார்.
வெவ்வேறான சமயங்களைச் சேர்ந்த மற்றவர்களின் கண்ணோட்டங்களை, கவலைகள், அக்கறைகளை, அச்சத்தைப் புரிந்துகொள்ள உண்மையான முயற்சிகளை மேற்கொண்டு அதன் வழி இது சாதிக்கப்படுவதாகவும் அதிபர் கூறினார்.
இதன் மூலமாகத்தான் உண்மையான சமூகப் பிணைப்பை காணலாம் என்ற அதிபர், ஒருவர் மற்றொருவரிடம் கருணை, அன்புடன் நடந்துகொண்டு செயல்பட தொடங்கும்படி சிங்கப்பூரர்களை வலிறுத்தினார்.
சிங்கப்பூர் அனைத்து வகை புற ஆதிக்கத்திற்கும் இலக்காகக்கூடியது என்பதைச் சுட்டிய அதிபர், பல வெளிநாடுகளில் சமூகங்களைப் பிளவுபடுத்திவிட்ட கலாசார மோதல்கள் இங்கு இறக்குமதியாவதைத் தவிர்க்க கவனமான அணுகு முறை இடம்பெற வேண்டும் என்றார்.

