மிகை நேரச் சம்பளம் தொடர்பில் 13 பேருந்து ஓட்டுநர்கள் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்திற்கு எதிராக தொடுத்த வழக்கு முக்கியமான சட்டப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்டது என்றும் அவை அதிகமான ஊழியர்களைப் பாதிக்கக்கூடியவை என்றும் உயர் நீதி மன்ற நிதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த ஊழியர்கள் 2019 மற்றும் 2020ல் வழக்குத் தொடுத்தனர். ஒவ்வொரு வாரமும் ஓய்வு நாள் இல்லாமல் வேலை பார்க்கவேண்டி இருந்ததாகவும் மிகை நேர வேலைக்குக் கொடுக்கப்பட்ட தொகை குறைவு என்றும் அவர்கள் வழக்கில் தெரிவித்து இருந்தனர்.
இந்த வழக்கை உயர் நீதிமன்ற விசாரணைக்கு அனுமதிக்கும் எழுத்து மூலமான தீர்ப்பை அளித்த நீதிபதி ஆண்ட்ரே லிம், "ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வேலை நியமனச் சட்டம், ஓய்வு நாட்கள் கட்டாயம் என்று குறிப்பிட்டு வேலை நேரத்திற்கு வரம்பும் விதிக்கிறது," என்றார்.
ஊழியர் ஒருவர் அத்தியாவசிய சேவையை வழக்க வேண்டிய நிலையில் இருக்கும்போது இச்சட்டத்தைப் புறக்கணித்துவிட முடியுமா என்பது கேள்வி. வாதியையோ அல்லது வழக்கில் சம்பந்தப்பட்டவர்களையோ மட்டுமின்றி பொதுவில் அதிக ஊழியர் களைப் பாதிக்கும் என்பதால் இது முக்கியமானது என்றார் நீதிபதி.

