செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
840e524f-b90f-4ff1-ba15-c8ed3b8e67e1
-

வேலை மோசடி; விழிப்புடன் இருக்கும்படி போலிஸ் அறிவுறுத்தல்

வேலை தருவதாகப் பொய் கூறி மாபெரும் சிங்கப்பூர் விற்பனைக்கான மின் வர்த்தகத் தளங்களில் மோசடிக்காரர்கள் வலைவிரித்திருப்பதாக போலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று போலிசார் அறிவுறுத்துகின்றனர். குறிப்பாக, இணையம் மூலம் பொருட்கள் வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

$100லிருந்து $500 வரை அன்றாட சம்பளம் வழங்கும் பகுதி நேர வேலை தொடர்பான பொய்த் தகவல்கள் வலம் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்பாஸ் மின்னிலக்கக் கையொப்பம்; யுஓபி அறிமுகம்

சிங்பாஸ் மின்னிலக்கக் கையொப்பத்தைப் பயன்படுத்தி வங்கி பரிவர்த்தனைகளைச் செய்யும் முறையை உள்ளூர் வங்கியான யுஓபி அறிமுகப்படுத்துகிறது.

இதுதொடர்பாக ஓராண்டுக்கு சோதனைமுறை நடத்தப்படும். இத்திட்டம் மூலம் சிங்பாஸ் செயலியைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சில பரிவர்த்தனைகளுக்கும் சேவை விண்ணப்பங்களுக்கும் மின் ஆவணங்களில் சிங்கப்பூரர்கள் கையெழுத்திடலாம்.

சிங்பாஸ் மின்னிலக்கக் கையொப்ப முறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. இம்முறையை சிங்கப்பூர் நில ஆணையம் முதன்முதலாகப் பயன்படுத்தியது.

பலர் விரும்பும் சமரச மையம்; முதல் இடம் பிடித்த சிங்கப்பூர்

சமரசப் பேச்சுவார்த்தைகளை சிங்கப்பூரிலும் லண்டனிலும் நடத்த பலர் விரும்புவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அதற்கான பட்டியலில் சிங்கப்பூரும் பிரிட்டனின் தலைநகர் லண்டனும் முதல் இடத்தில் உள்ளன. இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடம் பிடித்திருப்பது இதுவே முதல்முறை.

ஆசிய பசிபிக் வட்டாரத்திலும் சிங்கப்பூர் முதல் இடம்பிடித்துள்ளது. முன்பு கரீபியன் நாடுகள், தென் அமெரிக்க நாடுகள் ஆகியவற்றுக்கான பட்டியலில் சிங்கப்பூர் இடம்பெறவில்லை. ஆனால் தற்போது அந்தப் பட்டியலிலும் சிங்கப்பூரின் தரநிலை மேம்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் தளர்வினால் ஏறுமுக எதிர்பார்ப்பில் பங்குச்சந்தை

சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு குறைந்து வருவதால் கிருமிப் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானதை அடுத்து சிங்கப்பூர் பங்குச்சந்தை ஏறுமுகத்தை எதிர்பார்க்கிறது.

கட்டுப்பாடு தளர்வு செய்தி வெளியானதும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு கொஞ்சம் ஏற்றம் கண்டது. ஆனால் அதையடுத்து, சிறிதளவு குறைந்தது.

இருப்பினும் அது 0.29 விழுக்காடு கூடியதாக தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் ஏர்லைன்சின் பங்குகள் 1.99 விழுக்காடு அதிகரித்து $5.12ஆக பதிவானது. Sats நிறுவனத்தின் பங்குகள் 1.96 விழுக்காடு கூடியது.

கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் பங்குகளும் 1.08 விழுக்காடு கூடின.

இதற்கிடையே, செம்ப்கோர்ப் நிறுவனத்தின் பங்குகள் 1.38 விழுக்காடு குறைந்தது.