உரிமம் இல்லாமல் அறுவை சிகிச்சை முகக்கவசங்களை சிங்கப்பூரில் உற்பத்தி செய்த உள்ளூர் நிறுவனம் மீது விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
சுகாதார அறிவியல் ஆணையம் நேற்று அதனைத் தெரிவித்தது.
சட்டவிரோதமாக முகக்கவசம் உற்பத்தி செய்ததாக ஒரு நிறுவனம் மீது சந்தேகம் எழுந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
உபி கிரெசண்ட்டில் இருக்கும் விஷன் எம்பயர் நிறுவனத்தின் வளாகத்தில், சுகாதாரமற்ற, தற்காலிகமாக அமைக்கப்பட்ட இடத்தில் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.
அங்கே உற்பத்தி செய்யப்பட்ட முகக்கவசங்கள் அட்டைப் பெட்டிகளில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 33 அட்டைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டன. ஒவ்வொன்றிலும் 2500 முகக்கவசங்கள் இருந்தன.
சுகாதாரப் பொருட்கள் சட்டத்தின்கீழ், சுகாதார அறிவியல் ஆணையத்திடம் உரிமம் பெற்றால்தான் நிறுவனங்கள் முகக்கவசங்களை உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படும்.
அத்துடன் விஷன் எம்பயர் இண்டர்நேஷனல் நிறுவனம் முகக்கவசங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து அவற்றை வேறு பெயர் கொண்ட பெட்டிகளில் வைத்து அடுக்கி மீண்டும் விற்றதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
நிறுவனம் தயாரித்த முகக்கவசங்களும் மறுவிற்பனை செய்த முகக்கவசங்களும் இங்குள்ள மின் வர்த்தகத் தளங்களில் 10 வெள்ளி முதல் 22 வெள்ளி வரையிலும் விற்கப்பட்டதாக முதல்கட்ட விசாரணை கூறியது.
அப்பெயர் கொண்ட முகக்கவசங்களை வாங்கியவர்களை உடனடியாக அவற்றை பயன்படுத்துவதை நிறுத்தும்படி சுகாதார அறிவியல் ஆணையம் அறிவுறுத்தியது.
மின்வர்த்தகத் தளங்களில் அந்த முகக்கவசங்களின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

