செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
bc9fbae8-c8ce-4404-83a9-ce317cbf6c77
-

அக்டோபருக்குள் நால்வரில் மூவருக்கு தடுப்பூசி போட திட்டம்

வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் இங்கு வசிப்பவர்களில் பாதி பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடவும், அக்டோபர் மாதத்துக்குள் குடியிருப்பாளர்களில் 75% பேருக்குத் தடுப்பூசிகள் போட்டு முடிக்க சிங்கப்பூர் திட்டமிடுகிறது.

கடந்த 7ஆம் தேதியுடன் 1.8 மில்லியன் பேர் அதாவது மக்கள்தொகையின் 30 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசிகள் நிறைவுபெற்றுள்ளன. கடந்த வியாழக்கிழமை அந்த கணிப்பை வெளியிட்டார் நிதி அமைச்சரும் அமைச்சுகள் நிலைப் பணிக்குழுவின் இணைத்தலைவருமான திரு லாரன்ஸ் வோங்.

அமெரிக்காவில் இவ்வாண்டு ஜனவரியில் உச்சத்தில் இருந்த தொற்று விகிதம், அங்குள்ள பாதி பேருக்கு கொவிட்-19 கிருமிக்கு எதிரான தடுப்பாற்றல் ஏற்பட்டவுடன் குறைந்துகொண்டே வந்ததைச் சுட்டினார்.

சிங்கப்பூர் விரைவில் அந்த அளவுக்கு தடுப்பாற்றலை எட்டும் என்று திரு லாரன்ஸ் வோங் கூறினார்.

திங்கள் முதல் டாக்சி பயணங்களில் இரண்டுக்கு மேற்பட்டோர் செல்லலாம்

டாக்சிகளிலும் தனியார் வாடகை கார்களிலும் இரண்டு பேர் மட்டுமே செல்ல முடியும் எனும் விதிமுறை வரும் திங்கட்கிழமை ஜூன் 14ஆம் தேதி தளர்த்தப்படும்.

வாடகை கார்களில் பயணங்களைப் பகிர்ந்துகொள்ளும் சேவைகளும் அன்றிலிருந்து மீண்டும் தொடங்கும் என்று நிலப் போக்குவரவு ஆணையம் நேற்று அறிக்கை ஒன்றில் கூறியது.

ஜூன் 14ஆம் தேதி கொவிட்-19 கட்டுப்பாடுகள் சில தளர்த்தப்படுவதை ஒட்டி, இந்தக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும். எனினும் அனைத்து ஓட்டுநர்களும் பயணிகளும் எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகளை டாக்சி ஓட்டுநர்களும் வாடகைக் கார் ஓட்டுநர்களும் ஏற்கக் கூடாது என்று ஆணையம் கூறியது.

சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் புதிய தலைவர் மெல்வின் யோங்

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசின் துணைப் பொதுச் செயலாளர் திரு மெல்வின் யோங் (படம்), சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் (கேஸ்) புதியத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக திரு லிம் பியாவ் சுவான் கேஸ் அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்தார்.

புதிய தலைவரான திரு யோங் 2021 முதல் 2024 வரை அப்பொறுப்பில் இருப்பார் என்று கேஸ் அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது. ராடின் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் திரு மெல்வின் யோங், தேசிய போக்குவரத்து ஊழியர்கள் தொழிற்சங்கத்தின் நிர்வாகச் செயலாளரும் ஆவார்.

ஊழியர்களிடம் தடுப்பூசி தகவல்களை முதலாளிகள் கோர முடியாது

இங்குள்ள முதலாளிகள் அவர்களின் ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா இல்லையா என்று தெரிவிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க முடியாது. சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வலுவாக ஊக்குவிக்கப்பட்டாலும், அது விருப்பத்துக்கு உட்பட்டது என்று நிபூணர்கள் கூறினர்.

வர்த்தகத் தேவை இருந்தால் ஒழிய, ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்பதைத் தெரிவிக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது என்றார் சிங்கப்பூர் மனிதவள நிலையத்தின் (SHRI) தலைவர் திரு லோ பெக் கெம். ஊழியர்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என்பதைத் தெரிவிக்கவோ தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளவோ மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அவர் சொன்னார்.

அதைக் காரணம் காட்டி முதலாளிகள் ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கவும் கூடாது என்றார் மனிதவள நிபுணர்கள் நிலையத்தின் தலைவர் மாயங்க் பாரேக்.