சிங்கப்பூரில் நேற்று நண்பகல் 12 மணி நிலவரப்படி, சமூகத்தில் மூவர் உட்பட ஒன்பது பேருக்கு கொவிட்-19 கிருமி தொற்று உறுதி செய்யப்பட்டது. சுகாதார அமைச்சு நேற்று அதன் அன்றாட அறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்தது.
சமூகத்தில் உள்ள மூவருக்கும் மற்ற கிருமித் தொற்றுச் சம்பவங்களுக்கும் இடையே தொடர்பில்லை. வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளில் யாருக்கும் கிருமி தொற்றவில்லை.
மேலும் வெளிநாட்டிலிருந்து வந்த அறுவருக்கு தொற்று இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இல்லத் தனிமை உத்தரவில் அல்லது தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றது அமைச்சு. அந்த ஆறு பேரில் ஐவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.
இவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் 62,245 பேருக்கு கொரோனா கண்டுள்ளது.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை யாருடனும் தொடர்பு இல்லாத இரண்டு சமூகத் தொற்றுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.
அவர்களில் ஒருவர், பாலஸ்டியர் வட்டாரத்தில் உள்ள ஆரஞ்சு வேலி தாதிமை இல்லத்தில் பணிபுரியும் துணைத் தாதி ஆவார்.
இந்தியாவைச் சேர்ந்த அந்தத் துணைத் தாதிக்கு நோய் அறிகுறிகள் இல்லை என்றும் தாதிமை இல்லத்தின் வழக்கமான சோதனைகளில் தொற்று தெரியவந்தது என்றது சுகாதார அமைச்சு.
அத்துடன், பொங்கோலில் உள்ள சுமாங் வாக் புளோக் 352ஏ-யில் பரிசோதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள், வருகையாளர்கள் 452 பேரில் யாருக்கும் தொற்றில்லை என்றும் சுகாதார அமைச்சு கூறியது.


