கப்பல் துறை ஊழியர் ஒருவர் வேலை செய்துகொண்டிருந்த போது 15 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்துவிட்டார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து கப்பலிலிருந்து சரக்குகளை இறக்கும் பணிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்குமாறு ஜூரோங் துறைமுகத்திற்கு மனிதவள அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் எழுப்பிய வினாவுக்கு நேற்று பதிலளித்த அமைச்சு, வியாழக்கிழமை நிகழ்ந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகக் கூறியது. கப்பலிலிருந்து உலோகக் குழாய்களை இறக்கிக் கொண்டிருந்த 48 வயது மலேசியர் திடீரென்று கீழே விழுந்து விட்டார். பல எலும்புமுறிவுக் காயங்களுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது தீவிர சிகிக்சை பிரிவில் இருப் பதாக அமைச்சு கூறியது.
இதற்கிடையே, சம்பவத்தை தாங்களும் விசாரித்து வருவதாகவும் காயமுற்ற ஆடவரின் உடல்நிலை சீராக இருப் பதாகவும் ஜூரோங் துறைமுகத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சம்பவம் குறித்து வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (எஸ்சிடிஎஃப்) தனது ஃபேஸ் புக்கில் அன்றிரவு குறிப்பிட்டிருந்தது.
தனது படையினர் அங்கு செல்லும்போது ஆடவர் ஒருவருக்கு அவர் சார்ந்த நிறுவனத்தின் அவசர சமாளிப்புக் குழுவினர் உதவிக் கொண்டிருந்ததாக அது கூறியது.

