ஆள்மாறாட்ட மோசடிக் குற்றத்தில் ஈடுபட்டதாக நேற்று இருவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது. இங் ஜீ ஹாவ், 46, சிவ் மெங் டோங், 48 ஆகிய அவ்விரு வரில் இங் மலேசியர். இங்கு நிரந்தரவாசியாக உள்ள இவர், மூன்று பேரிடம் $230,000 பணம் வசூல் செய்து சிவ்விடம் கொடுத்தார்.
அந்தப் பணத்தில் $18,000 தொகையை ஒரு வங்கிக் கணக்கில் போட்ட பின்னர் $186,000 ரொக்கத்தை மர்ம நபர் ஒருவரிடம் சிவ் கொடுத்தார்.
இந்நிலையில் வியாழக்கிழமை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் மோசடியில் பணம் கொடுத்து ஏமாந்ததாக ஐந்து பேரிடம் இருந்து கடந்த ஆண்டு ஜூலை 18க்கும் ஜூலை 29க்கும் இடைப்பட்ட நாட்களில் தங்களுக்குப் புகார் வந்ததாகக் கூறியது.
இவர்கள் அனைவரும் $1.5 மில்லியனுக்கும் மேல் மோசடி நபர் களிடம் கொடுத்ததாகக் காவல்துறையிடம் கூறினர். மோசடி நடந்த விதத்தை காவல் துறையினர் விளக்கினர்.
தங்களை சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள் என்று சொல்லிக்கொண்டு பொதுமக்களை தொலைபேசி வாயிலாக மர்ம நபர்கள் தொடர்புகொள்வார்கள்.
வெளிநாட்டுக்குக் கள்ளப்பணம் அனுப்பியதாக அந்நபர்கள் குற்றம் சாட்டுவர். அது சட்டவிரோதப் பணம் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் தங்களிடம் இருக்கும் தொகையை மர்ம நபர்களிடம் அவர்கள் கொடுத்துள்ளனர். பணம் பெற்றவர்கள் தரகுத் தொகை பெறும் நோக்கில் மர்மக் கும்பல் ஒன்றுக்காக செயல்பட்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது. தரகுப் பணம் மீட்கப்பட்டுள்ளது.
இருவரும் தலா $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் ஜூலை 9ஆம் தேதி விசாரணை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆள்மாறாட்ட மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் $500,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

