புதுடெல்லி: இந்தியாவில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று கிருமித்தொற்று ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா தொற்றுச் சம்பவங்களின் விவரங்களை சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டது.
அதன்படி கடந்த 24 மணி நேரத் தில் இந்தியாவில் 91,702 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து 74 ஆயிரத்து 823ஆக அதி கரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 11 லட்சத்து 21 ஆயிரத்து 671 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பிலிருந்து கடந்த 24 மணி நேரத்தில் 134,580 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களுடன் சேர்த்து தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சத்து 90 ஆயிரத்து 73 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா கிருமிக்கு 3,403 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இந்தியாவில் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 363,079க்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 18 முதல் 45 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று இந்திய அரசு அறிவித்த தால் தடுப்பூசிக்கு கடும் பற்றாக்குறை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரியில் 1.38 பில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை இந்திய அரசு தொடங்கியது. சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், முதியோர்கள் ஆகியோருக்கு இதில் முன்னுரிமை வழங்கப்பட்டது.
பின்னர் 45 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஏப்ரலில் தொடங்கப்பட்டது.
கடைசியாக, கிருமித்தொற்று அதிகரித்ததால் தடுப்பூசி போடு வதை விரைவுப்படுத்த விரும்பிய பிரதமர் மோடி, 18க்கும் 45க்கும் இடைப்பட்ட வயதில் உள்ளவர் களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மே மாதம் அறிவித்தார்.
கடைசியாக அறிவிக்கப்பட்ட இந்தப்பிரிவில் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 43 விழுக்காட்டினர் அடங்கியுள்ளனர்.
அதாவது இவர்கள் மட்டும் 600 மில்லியன் பேர். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது மிகவும் சவாலான பணியாக இருக்கும் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் கொவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக் தவிர ஃபைசர், மொடர்னா தடுப்பூசி களுக்கும் அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உள்ளூரில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கவும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.


