'எல்லாருக்கும் தடுப்பூசி'
புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இணையத்தள வசதி இல்லாதவர் களுக்கும் வாழும் உரிமை உண்டு. எனவே இணையம் மூலம் பதிவு செய்ய முடியாமல் தடுப்பூசி மையத்துக்கு நேரடியாக வரும் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று டுவிட்டர் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
தடுப்பூசிகளை வீணாக்குவதில்
முதலிடம் பிடித்த மாநிலம்
புதுடெல்லி: இந்தியாவில் சில மாநிலங்களுக்கு போதுமான தடுப்பூசிகள் இல்லை. ஆனால் அதேசமயத்தில் சில மாநிலங்களில் தடுப்பூசிகள் வீணாக்கப்படுகின்றன. அந்த வரிசையில் ஜார்க்கண்ட் முதலிடத்தில் உள்ளது. அங்கு தடுப்பூசி 33.95 விழுக்காடு வீணாகி இருப்பதாக அதிகார பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோல சட்டீஸ்கர் (15.79%), மத்திய பிரதேசம் (7.35%), பஞ்சாப் (7.08%), டெல்லி (3.95%), ராஜஸ்தான் (3.91%), உத்தரப் பிரதேசம் (3.78%), குஜராத்(3.63%), மராட்டியம் (3.59%) ஆகியவை தடுப்பூசி டோஸ்களை வீணாக்கி இருக்கின்றன. கேரளா மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்கள் தடுப்பூசிகளை வீணாக்காமல் பயன்படுத்தியுள்ளன.
கர்நாடகாவில் 14ஆம் தேதி
ஊரடங்கு தளர்த்தப்படுகிறது
பெங்களூரு: கர்நாடகாவில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு இம்மாதம் 14ஆம் தேதி தளர்த்தப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்து உள்ளார். கிருமிப் பரவலைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 11ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததால் எடியூரப்பா இந்த முடிவை எடுத்துள்ளார்.
சுரங்கத்தில் தொழிலாளர்கள்;
கடற்படை உதவிக்கு கோரிக்கை
ஷில்லாங்: மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா மலை மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் சுரங்கத்தினுள் தண்ணீர் புகுந்து அங்கு ஐந்து தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளிட்ட மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால் 12 நாட்கள் ஆன பிறகும் அவர்களை மீட்க முடியவில்லை. இந்த நிலையில் இந்திய கடற்படையின் உதவிக்கு மேகாலயா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து பேசிய முதல்வர் கான்ராட் கே.சங்மா, அரசின் தடையை மீறி சட்டவிரோதமாக இயங்கும் சுரங்கத்தின் உரிமையாளரை போலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்றார்.

