சாங்கி விமானநிலையத்தில் பணிபுரியும் சுமார் ஆயிரம் முன்களப் பணியாளர்கள் அடுத்த மாதம் அன்பளிப்பாக $50 பயண மதிப்புள்ள ஈஸி லிங் அட்டையைப் பெறுவார்கள்.
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அதிகாரிகள் ஏறத்தாழ 70 பேர், அந்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக, இந்த உதவி மூலம் அந்த ஊழியர்களின் போக்குவரத்துச் செலவைக் குறைக்க முன்வந்து உள்ளனர்.
நன்மை அடையும் ஊழியர்களில் துப்புரவாளர்கள், பயணிகளின் பெட்டிகளைக் கையாளுவோர் ஆகியோரும் அடங்குவர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
'விமானப் போக்குவரத்து தோழர்கள்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் தாங்கள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
விமானநிலையத்தில் மற்றொரு கிருமித்தொற்று குழுமம் உருவாவதைக் தடுப்பதற்காக அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதையடுத்து இத்தகைய ஊழியர்களில் சிலர் தங்களுடைய வழக்கமான கொரோனா பரிசோதனைக்காக அடிக்கடி பயணம் செய்யவேண்டி இருக்கிறது என்பதை அந்த அமைப்பு சுட்டியது.
இதனிடையே, இந்த உதவி பற்றி கருத்து கூறிய, விமானப் போக்கு வரத்து தோழர்கள்' அமைப்பை உருவாக்கிய திருவாட்டி ஏஞ்சலா இங், விமானநிலையத்தில் தொற்று ஏற்பட்டதால் விமானப் போக்குவரத்துத் துறைக்கு மேலும் பல சவால்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.
இந்தச் சூழலில் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு வகை ஊக்குவிப்பு தேவைப்படுவதாகக் கூறிய அவர், குறிப்பாக வீட்டில் இருந்தபடி பாதுகாப்பாக வேலை பார்க்க முடியாத முன்களப் பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு அவசியம் என்று தெரிவித்தார்.
இந்த அமைப்பு ஈஸிலிங் திட்டத்திற்காக $25,000 சேர்த்துள்ளது. வெள்ளிக்கு வெள்ளி என்ற அடிப்படையில் தான் $25,000 தருவதாக தெமாசெக் டிரஸ்ட் அமைப்பின் ஒரு நிதியம் உறுதி அளித்துள்ளது. இந்த முயற்சியில் பொதுமக்களும் பங்கெடுக்கலாம். விவரங்கள் விமானப் போக்குவரத்து தோழர்கள்' அமைப்பின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருக்கின்றன.
இதனிடையே, விமான நிலைய ஊழியர்கள் ஏறக்குறைய 5,000 பேருக்கு ஆறு மாத காலம் சிறப்பு மாதாந்திர ஊக்கத்தொகையை வழங்குவதற்காக $15 மில்லியன் ஒதுக்கப்பட்டு உள்ளது.
மாறி வரும் வேலை நேரத்தின்போது ஊழியர்களுக்கு உணவுச் செலவுக்கும் அது பயன்படும். ஊழியரின் சொந்த பாதுகாப்பு உடைகளுக்கு ஆகும் செலவை ஈடுகட்டவும் அந்த நிதி பயன்படும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் சாங்கி விமானநிலையக் குழுமமும் தெரிவித்துள்ளன.

