சிங்கப்பூர் பெண்கள் கடந்த ஆண்டுகளில் நல்ல முன்னேற்றம் கண்டு வந்தபோதும், இங்கு உள்ள தாய்மாருக்கு இன்னும் சிறப்பாக ஆதரவு அளிக்க, ஒரு குடும்பத்தில் ஆண் பெண் இருவரின் பங்கு என்ன என்பது பற்றிய எண்ணப்போக்குகள் மாறுவது அவசியம். தேசிய வளர்ச்சி, வெளியுறவு ஆகியவற்றுக்கான மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் அவ்வாறு கூறியுள்ளார்.
ஜாமியா சிங்கப்பூர் அமைப்பு நேற்று ஏற்பாடு செய்த இணைய வழி நிகழ்ச்சியில் அவர் பேசினார். தாய்மாரைக் கைதூக்கிவிடும் வழிகள் பற்றி கருத்துகளையும் பரிந்துரைகளையும் கேட்டறிய அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
"உதாரணத்துக்கு பெண்களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகள் நடத்தி, அதில் ஓர் உன்னதமான பெண் ஒருவர் சிறப்புரை ஆற்றும் நிகழ்ச்சிகளுக்கு நாம் சென்றிருப்போம். கேள்வி நேரத்தின்போது இவை அனைத்தையும் எப்படி செய்கிறீர்கள் என்ற கேள்வி அவரிடம் தொடுக்கப்படும்," என்றார் திருவாட்டி சிம் ஆன். ஆனால் ஆண்கள் ஒருவரை ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வது இல்லை என்றார் அவர்.
பெண்களும் ஒரே நேரத்தில் பல பணிகளை மேற்கொள்ளக் கூடியவர்கள். ஆனால் ஒவ்வோர் அம்சத்திலும் சிறந்து விளங்குவது கடினம். அதுவே பெண்களுக்கு மனக்கவலையை அளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சினைக்கு முழுத் தீர்வு இருக்க முடியாது என்ற போதும் பாலினங்களின் பங்கு பற்றிய வேறு அணுகுமுறையைக் கொண்டிருக்க, அடுத்த தலைமுறைக்குக் கற்றுத் தருவது உதவக்கூடும் என்றார் அவர்.
'தாய்மாராய் இருப்பது: சவால்களும் எதிர்காலத் தீர்வுகளும்' எனும் தலைப்பிலான நேற்றைய நிகழ்ச்சியில் சுமார் நூறு பேர் கலந்துகொண்டனர்.
குழந்தைப் பராமரிப்புக்கு அதிகச் செலவு ஆவதும் வேலைக்குச் செல்லும் தாய்மார் பிள்ளைகளையும் வயதானவர்களையும் பார்த்துக்கொள்ள வேண்டும் எனும் எதிர்பார்ப்பும் பங்கேற்பாளர்கள் எடுத்துரைத்த சவால்களில் சில.
வேலைக்குச் செல்லாத தாய்மாருக்கு உதவ அரசாங்கக் கொள்கைகள் வேண்டும் என்றும் அதில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன் நீக்குப்போக்கான பணி ஏற்பாடுகள், வெவ்வேறு வயதுள்ள பிள்ளைகள் உள்ள தாய்மாருக்கு குறிப்பிட்ட உதவித் திட்டங்கள் போன்ற யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

