தமது 13 மாத இரட்டைக் குழந்தைகளுக்காக பாலர் பள்ளி தேடலில் இறங்கியபோது, பிள்ளைகள் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு இருக்கும் என்று திரு ராஜ் எண்ணினார்.
ஆனால் அவரின் வீட்டுக்கு அருகில் உள்ள பாலர் பள்ளிகளில் தமிழ்மொழி கற்பிக்கப்படவில்லை. இதற்காக மிகத் தொலைவில் உள்ள ஒரு பாலர் பள்ளியைத் தேர்வு செய்யலாம் என்றால் அங்கு இடமும் இல்லை. அதனால் அரசாங்க ஊழியரான திரு ராஜ், அவரின் மனைவி இருவரும், அருகில் உள்ள பாலர் பள்ளிக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பி அங்கு சீன மொழியைத் தாய்மொழிப் பாடமாக கற்றுக்கொள்ள முடிவெடுத்தனர்.
வளரும் பருவத்தின் முக்கிய கட்டத்தில் இருக்கும்போதே தமிழ், ஆங்கிலம் என இருமொழிப் புலமையைத் தம் மகன்கள் பெற முடியாமல் போனதை இழந்த ஒரு வாய்ப்பாகக் கருதுகிறார் திரு ராஜ்.
சிங்கப்பூரில் உள்ள 1,900க்கும் மேற்பட்ட பாலர் பள்ளிகளில் சுமார் 160 பள்ளிகள் மட்டுமே மூன்று தாய்மொழிப் பாடங்களையும் வழங்குகின்றன.
கிட்டத்தட்ட 260 பாலர் பள்ளிகளில் இரண்டு தாய்மொழிப் பாடங்கள் வழங்கப்படுகின்றன. எஞ்சிய 77% பள்ளிகளில் ஒரே ஒரு தாய்மொழிப் பாடமான சீன மொழியே கற்றுத் தரப்படுகிறது.
ஆசிரியர் பற்றாக்குறை,
ஆங்கிலப் புழக்கம்
இதற்கிடையே மூன்று தாய்மொழிப் பாடங்களும் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்களும் பெற்றோர்களும் கூறுகின்றனர்.
வீட்டில் ஆங்கிலத்தில் மட்டும் பேசும் வழக்கம் அதிகரித்துள்ளதால் சீன மொழியை நாடும் வழக்கமும் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், இவ்வாறு மொழி ரீதியாக பன்முகத்தன்மை குறையும்போது வரும் ஆண்டுகளில் சிங்கப்பூரர்களின் அடையாளம், கலாசாரம் ஆகியவை பாதிக்கப்படலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது.
வட்டாரத்தில் உள்ள பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் தேவைகளையும் விருப்பங்களையும் அடிப்படையாகக் கொண்டே பாலர் பள்ளிகள் தாங்கள் வழங்கும் தாய்மொழிப் பாடங்களை உறுதிசெய்வதாக பாலர் பருவ மேம்பாட்டு வாரியப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் கற்பிக்கும் தகுதி
உள்ளவர்கள் குறைவு
கூடுதல் தாய்மொழிப் பாடங்களைப் பாலர் பள்ளிகள் வழங்க வேண்டுமானால் ஆசிரியர்களை ஈர்ப்பது முக்கியம் என்றார் பேச்சாளர். சிங்கப்பூரில் உள்ள சுமார் 10,500 பாலர் பருவக் கல்வியாளர்களில் 700 பேர் மட்டுமே தமிழ்மொழி கற்பிக்கும் தகுதியுடைவர்கள்.
இருப்பினும், அவர்கள்கூட தற்போது தாய்மொழி கற்பிக்கும் ஆசிரியர்களாக இருப்பதில்லை.
ஆசிரியரின் சுய விருப்பம், ஆங்கில ஆசிரியராக கற்பிக்க வேண்டும் என பள்ளியில் ஏற்படும் தேவை போன்ற காரணங்களால் இந்நிலை உருவாகலாம் என்றார் பேச்சாளர்.
பாலர் பள்ளி ஆசிரியர்கள் பத்தில் அறுவர் உள்ளூர்வாசிகள் என்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வெளிநாட்டு ஆசிரியர்கள் உள்ளனர் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் சிறந்த பாலர் பள்ளி ஆசிரியர்களை ஈர்ப்பதும் துறையில் அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதும் தொடர்ந்து சவாலாக இருப்பதாக தேசிய கல்விக் கழகப் பிள்ளை மேம்பாட்டு ஆய்வு நிலையத்தின் கல்வித்துறை தலைவர் டாக்டர் நிர்மலா கருப்பையா கூறியுள்ளார்.
பட்டயத்திலிருந்து பட்டம் பெறுவதைக் கல்வித் தகுதியாகக் கொண்டு ஆசிரியர்களைத் தேர்வுசெய்தால் கல்வித்தரம் மேம்படலாம் என்ற ஆலோசனையை டாக்டர் நிர்மலா சுட்டினார். ஆனால் கல்வித் தகுதியை ஏற்றும்போது ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலும் சரிவைச் சந்திக்கும் சாத்தியமுண்டு.
"பாலர் பள்ளி ஆசிரியர் ஆவது ஒரு வரம். ஆர்வம், மீள்திறன், சரியான சிந்தனை ஆகியவை ஒருவரிடம் இருந்தால் இத்துறையில் நீடிப்பதுடன் நிலைக்கும் வகையில் பங்களிக்க முடியும்," என்று கூறுகிறார் 'இட்டோன்ஹவுஸ்' மவுண்ட்பேட்டன் கிளை பாலர் பள்ளியில் தமிழ் ஆசிரியராக உள்ள திருவாட்டி பரமேஸ்வரி தமிழ்செல்வன்.
சீனமொழி பக்கம் சாயும் பெற்றோர்
இதற்கிடையே மலாய், இந்திய பெற்றோர்கள் சிலர் தங்களின் பிள்ளைகள் சீனமொழி பயில்வதை விரும்புவதும் உண்டு. சீனத்தை முக்கிய மொழியாகக் கருதி பெற்றோர் இவ்வாறு முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
தம் மூன்று பிள்ளைகளும் பாலர் பள்ளியில் சீன மொழி பயின்றதாக இல்லத்தரசி லாவண்யா பகிர்ந்துகொண்டார். மூத்த மகன் தொடர்ந்து தொடக்கப்பள்ளியிலும் சீனமொழி பயில்வதாகக் கூறிய அவர், இதைத் தம் மகனின் விருப்பத்திற்கு விட்டுவிட்டதாகச் சொன்னார்.
மொழியும் கலாசாரமும் பின்னிப் பிணைந்தது என்று கருதும் டாக்டர் நிர்மலா, "தங்களின் தாய்மொழி தொடர்பில் குறைவாகக் கற்கும் அல்லது அறிந்திடும் பிள்ளைகளுக்குக் கலாசாரம் தொடர்பிலும் குறைந்த அளவு புரிந்துணர்வு இருக்கும்," என்றார்.