ஆண், பெண் சமத்துவம் தொடர்பில் ஆண்பிள்ளைகள் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு சிங்கப்பூரில் லாப நோக்கமற்ற அமைப்பு ஒன்று புதிய திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.
ஆண்மை தொடர்பாக எழக்கூடிய தவறான எண்ணங்களை எதிர்க்க வேண்டும் என்பதைப் பிள்ளை வளர்ப்பின்போது தங்களின் மகன், மகள் என இரு சாராருக்கும் பெற்றோர்கள் உணர்த்துவதே கடந்த மாதம் 'யுனைடெட் விமன் சிங்கப்பூர்' அமைப்பால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் நோக்கம்.
குறிப்பாக 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்பிள்ளைகளுக்காக துவங்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ் புதிய இயக்கத்துடன் பட்டறைகள், ஆண்டிறுதிச் சமூக மாநாடு போன்ற அங்கங்களும் திட்டமிடப்பட்டுள்ளன. 'வன்முறையில்லாமல் பலம் காண்பது' என்ற தலைப்பைக் கொண்ட இயக்கம் மூலம் இளையர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இடையே கலந்துரையாடல்கள் நிகழும்.
ஆண், பெண் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, பாலினம் அடிப்படையிலான வன்முறை போன்ற அம்சங்கள் இக்கலந்துரையாடல்களில் பேசப்படும்.
கொரோனா கொள்ளைநோய்ச் சூழலில் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் ஆதிக்கம் செலுத்துவது, வன்முறையைக் கையாள்வது ஆகியவற்றைத் தவிர்க்கும் வழிகளை ஆண்பிள்ளைகள் அறிவது முக்கியம் என்று அமைப்பின் தலைவர் திருவாட்டி ஜியோஜெட் டான் கூறினார்.
வன்முறை மூலம் ஆண்பிள்ளைகள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதைத் தவிர்ப்பதுடன் ஆண்மை என்றால் என்ன என்பதை அவர்கள் மறுஆய்வு செய்திட வேண்டும் என்றார் அவர்.
சிறு வயதிலும் சமத்துவப் பாடம்
ஆண்மை தொடர்பில் எழும் தவறான எண்ணங்களைப் புரிந்துகொள்ளும் பக்குவம் சிறு பிள்ளைகளிடம் இல்லை என்ற நிலையில், நிறபேதமில்லாமல் விளையாட்டுப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பது (எடுத்துக்காட்டாக, இளஞ்சிவப்பு பொருளைச் சிறுவன் தேர்ந்தெடுப்பது), உணர்வுகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவது போன்ற உத்திகளைப் பெற்றோர்கள் கையாளலாம்.