தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகமானோரை ஈர்த்த பூங்காக்கள், அழகு நிலையங்கள்

2 mins read
1a40d0a9-738c-4ca3-afbc-9cf301eb6218
சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்தில் நேற்று குழுவுக்கு ஐவர் என்ற முறையில் பலர் கூடி, அங்கு இடம்பெற்ற விலங்கு சாகசக் காட்சிகளைப் பார்த்ததுடன், விலங்குகளை அருகில் சென்றும் பார்த்து மகிழ்ந்தனர். பள்ளி விடுமுறை என்பதால் மாணவர்கள் அதிக அளவில் தென்பட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

நேற்று முதற்கட்டமாக கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்வு. ஒரு குழுவில் ஐவர் இருக்கலாம்

சிங்கப்பூரில் நேற்று முதற்கட்டமாக கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், குழுவுக்கு ஐவர் என்ற விகிதத்தில் அதிகமானோர் வெளியே சென்றனர்.

அவர்களில் பெரும்பாலோர் பூங்காக்கள், சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் போன்ற கவரும் இடங்கள் போன்றவற்றில் காணப்பட்டனர். மேலும் இப்போது பள்ளி விடுமுறை காலமாக இருப்பதால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை வெளியே அழைத்து வந்திருந்தனர்.

அதிகமானோரை ஈர்க்கும் இடங்களில் முக்கியமானது அழகு நிலையங்கள். பல்வேறு அழகு நிலையங்களில் முன்பதிவு முடிந்து விட்டது.

பீஷான் பூங்கா, ஜூரோங் லேக் பூங்கா ஆகியவற்றுக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திக் குழு சென்று பார்த்ததில், அங்கு குழுவுக்கு ஐவர் என்ற வீதத்தில் கூடியிருந்த பலரும் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வீட்டிலேயே அடைந்து கிடந்து, இப்போது வெளியே வந்திருப்பது உற்சாகத்தை அளித்துள்ளது என்றனர்.

ஜூன் பள்ளி விடுமுறை முடிய இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் வேளையில், பெரும்பாலான குழுக்களில் பிள்ளைகள் அதிகம் காணப்பட்டனர்.

ஜூரோங் லேக் பூங்காவில் தமது இரு மகன்கள், தாயார், இல்லப் பணிப்பெண் ஆகியோருடன் நடந்துகொண்டிருந்த அரசாங்க ஊழியரான 45 வயது ஆன்னா வோங், "எனது தாயார் இன்னொரு வீட்டில் வசிக்கிறார். அவரையும் என் பிள்ளைகளையும் பூங்காவுக்கு அழைத்து வந்ததில் மகிழ்ச்சி. நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பது என் தாயாருக்கு சற்று சிரமமாக இருந்தது," என்றார்.

பீஷான் பூங்காவில் காணப்பட்ட 56 வயதாகும் திருவாட்டி சித்தி முஸ்லேஹாட், திருவாட்டி மர்டினா மஜித் தங்களுடன் உறவினர் பிள்ளைகள் மூவரும் வந்திருந்தனர்.

"புதிய தளர்வு அறிவிப்பைக் கேட்டவுடன் நாங்கள் வெளியே செல்லலாம் என்று உற்சாகமடைந்தோம். பிள்ளைகளும் ஒன்று கூடுதலில் மகிழ்ச்சியடைந்தனர்," என்றார் திருவாட்டி சித்தி.

சிங்கப்பூர் விலங்கியல் பூங்கா, கரையோரப் பூந்தோட்டம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் வருகையாளர் விகிதமும் 25 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டதால் அங்கும் அதிகமானோர் காணப்பட்டனர்.

கட்டுப்பாட்டுத் தளர்வுகளில் ஒன்று அழகு நிலையங்களில், வாடிக்கையாளர்கள் சேவையைப் பெற்றுக்கொள்ளும்போது முகக் கவசத்தை அகற்றி விடலாம் என்பது.

ஜூரோங் ஈஸ்ட், ஹாஜி லேன் ஆகிய இடங்களில் 'ஜே ஸ்டூடியோஸ்' அழகு நிலையங்களில் நடத்தி வரும் அதன் இயக்குநர் திருவாட்டி ஜெர்ரி மான், "எங்கள் இரு கிளைகளில் திங்கட்கிழமைக்கான அனைத்து முகப் பராமரிப்பு முன்பதிவுகளும் எடுக்கப்பட்டு விட்டன," என்றார்.

இன்டர்நேஷனல் பிளாசாவில் உள்ள 'பியூட்டி ஹைரைசன் எஸ்தெத்டிக்ஸ்' அழகு நிலையத்தின் இயக்குநர் திருவாட்டி லிம் ஜூ லி, "ஒருவழியாக அழகு நிலையத்தைத் திறக்க முடிந்ததில் மகிழ்ச்சி. கடந்த ஆண்டு நோய் முறியடிப்பு காலத்தின்போது அங்கு வருவதை நிறுத்திக்கொண்ட வாடிக்கையாளர்கள், அதன் பிறகு திரும்பி வரவில்லை. இதுபோல் பல வாடிக்கையாளர்களை இழந்துவிட்டோம்.

"இப்போது வாடிக்கையாளர்களுக்கு முகக்கவசத்தை அணிந்தவாறே உடலை அழகுப்படுத்தும் சேவைகளை வழங்க எண்ணியுள்ளோம்," என்றார்.