ஞாபக மறதி நோயாளிகளுக்கு உதவும் சுவரோவியங்கள்

2 mins read
146ab4ea-27e9-4556-8000-eaf51e95c1c8
2019 மார்ச் முதல் கெபுன் பாருவில் உள்ள பத்து புளோக்குகளின் 37 சுவர்களில் வழிகாட்டும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. படம்: அல்ஷைமர்ஸ் நோய் சங்கம் -

வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கின் வெற்றுத்தளத்தில் சென்றுகொண்டிருந்தபோது திருவாட்டி ஷெர்லி சியோங், அருகில் உள்ள புளோக்கில் வசிக்கும் ஒரு மூதாட்டி படிக்கட்டுகளில் ஏறிச் செல்வதைப் பார்த்தார்.

அந்த மூதாட்டியிடம் சென்ற 78 வயது திருவாட்டி ஷெர்லி, "ஆன்டி, யாரையாவது தேடுகிறீர்களா," என்றார். அதற்கு அந்த முதியவர், "ஆம். நான் என் வீட்டுக்குச் செல்கிறேன்," என்றார்.

ஆனால் அந்த முதியவர் தவறான புளோக்கில் ஏறிக் கொண்டிருந்ததை உணரவில்லை. பின்னர் ஷெர்லி, அந்த முதியவரை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இது நடந்து சில ஆண்டுகள் இருக்கும்.

இன்று, அந்த முதியவர் வசிக்கும் கெபுன் பாரு புளோக்குகளின் சுவர்களில் ஒரு குவளை காப்பி அல்லது அரிசி மாவால் ஆன இனிப்பு உருண்டை ஆகியவற்றின் படங்கள் வரையப்பட்டிருக்கும்.

இப்படிப்பட்ட தெளிவான அடையாளக் குறிப்புகள், சமையலறை உதவியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திருவாட்டி ஷெர்லி போன்ற முதியவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.

தம்மை போன்ற வயது முதிர்ந்தவர்கள் அதிகம் வசிக்கும் கெபுன் பாரு பேட்டையில், சுற்றுச்சூழலை மேம்படுத்த வேண்டும் என்றும் அப்போதுதான் முதியவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு எளிதில் செல்ல உதவியாக இருக்கும் என்றும் திருவாட்டி ஷெர்லி கருதுகிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் முதல் கெபுன் பாருவில் உள்ள பத்து புளோக்குகளின் 37 சுவர்களில் வழிகாட்டும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இத்திட்டத்துக்கு அல்ஷைமர்ஸ் நோய் சங்கம் தலைமையேற்கிறது. இதன் மூலம் டிமென்ஷியா, அல்ஷைமர்ஸ் போன்ற ஞாபக மறதி நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் உள்ள இடங்களைச் சுதந்திரமாக அடையாளம் காண உதவியாக இருக்கும் என்றார் அச்சங்கத்தின் ஆலோசகர் திருவாட்டி மேரி ஆன் கூ.

"எங்கள் சங்கம், கெபுன் பாரு அடித்தளத் தொண்டூழியர்களின் உதவியுடன் அந்தப் பேட்டையில் முதியோர் அதிகம் வசிக்கும் புளோக்குகளை அடையாளம் கண்டு அந்த புளோக்குகளின் சுவர்களின் வழிகாட்டி ஓவியங்களை வரைவதில் அணுக்கமாகப் பணியாற்றி வருகிறது என்றும் விவரித்தார் திருவாட்டி மேரி.

"இத்திட்டம் தொடர்பில் டிமென்ஷியா நோயாளிகளின் கருத்துகளும் கேட்டறியப்பட்டது. உதாரணத்துக்கு, வெற்றுத் தளத்தில் உள்ள ஒவ்வொரு சுவரிலும் ஓவியம் வரைந்தால் அது சில சமயம் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.

"மேலும் தேர்ந்தெடுக்கப்படும் ஓவியங்களும் அவை வரையப்படவிருக்கும் இடங்களும் கவனமாகப் பரிசீலிக்கப்படுகின்றன," என்றும் திருவாட்டி மேரி விளக்கினார்.