மின் ஸ்கூட்டர், மின் சைக்கிள் ஓட்டுநர்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

மின் ஸ்கூட்டர், மின் சைக்கிள் ஓட்டுநர்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

2 mins read
46bb215a-a7dc-4241-be6c-19dcd1a92946
-

எரிசக்தியால் இயங்கும் சைக்கிள்கள் மற்றும் மின் ஸ்கூட்டர்கள் ஆகியவற்றின் ஓட்டுநர்கள் இவ்வாண்டு இறுதிக்குள் கட்டாய எழுத்துபூர்வ தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் அவர்கள் தங்கள் சாதனங்களை பொது இடங்களில் பயன்படுத்த முடியும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

மின் சைக்கிள் ஓட்டுநர்கள் 40 நிமிடங்களில் 40 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும். மின் ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் 30 நிமிடங்களில் 30 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

உந்து நடமாட்டச் சட்ட விதிகள், ஒழுங்கு விதித் தொகுப்பு, பாதுகாப்பாக ஓட்டும் நடைமுறைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட கேள்விகள் கொண்ட தேர்வில் பங்கேற்பாளர்கள் 80% தேர்ச்சியை்ப பெற வேண்டும்.

தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் மின்னிலக்கச் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்தப் புதிய விதி அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நடப்புக்கு வருவதற்கு முன், அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் ஓட்டுநர்கள் தங்களைத் தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்ளலாம் என்று ஆணையம் நேற்று குறிப்பிட்டது.

"2022 ஜனவரி 1ஆம் தேதி முதல் மின் சைக்கிள், மின் ஸ்கூட்டர் ஓட்டுநர்கள் தங்கள் மின்னிலக்கச் சான்றிதழ்களை அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும்.

"இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து ஓட்டுநர்கள் தேர்வு எழுதலாம். ஆகவே, தேர்வை விரைவில் எழுதி தேர்ச்சி சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு ஓட்டுநர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்," என்று ஆணையம் கூறியது.

ஓட்டுநர்கள் இம்மாதம் 30ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரியின் பெரி யவர் தொடர்கல்வி பயிலகத்தில் தேர்வுக்குப் பதிந்துகொள்ளலாம்.

இம்மாதம் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை தேர்வுக்குப் பதிந்துகொள்வோர் $5 செலுத்த வேண்டும். முதல் முறை தோல்வி கண்டவர்கள் இலவசமாக மறுமுறை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

செப்டம்பர் 30ஆம் தேதிக்குப் பிறகு பதிவு செய்பவர்கள் ஒரு முறைக்கும் $10 கட்டணம் செலுத்த வேண்டும்.

ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளில் ஏதாவது ஓன்றில் தேர்வு எழுதலாம். ஓட்டுநர்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மின் கையேடுகள் மூலம் தேர்வுக்குத் தயார்ப்படுத்திக்கொள்ளலாம்.

தேர்வை நேரடியாக எழுத விரும்புவோர், நிலப் போக்குவரத்து ஆணையத்தைத் தொடர்புகொள்ளலாம். ஒவ்வொருவரின் விருப்பத்தையும் ஆணையம் கவனமாகப் பரிசீலிக்கும்.

தேர்வு எழுதுவோர் குறைந்தது 16 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். அதுதான், மின் சைக்கிள், மின் ஸ்கூட்டர் ஓட்டுநர்களுக்கான குறைந்தபட்ச வயது.

16 வயதுக்குக் கீழ்பட்ட மின் ஸ்கூட்டர் ஓட்டுநர்களை வழிநடத்தி மேற்பார்வையிடும் பெரியவர்களும் மின் ஸ்கூட்டருக்கான எழுத்துத் தேர்வை எழுத வேண்டும் என்றும் ஆணையம் தனது அறிக்கையில் கூறியது.