தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது நேற்று தொடங்கியது.
பள்ளி மாணவர்கள், உயர் கல்வி நிலைய மாணவர்கள், தன்னாட்சி பல்கலைக்கழக மாணவர்கள், பலதுறைக் தொழிற்கல்லூரி மாணவர்கள், தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் என கிட்டத்தட்ட 400,00 மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு அறிவித்திருந்தது.
இதற்காக, கல்வி அமைச்சு நான்கு தடுப்பூசி மையங்களை அமைக்க திட்டமிட்டிருந்தது.
அதன்படி, இம்மாதம் 7ஆம் தேதி அங் மோ கியோவில் உள்ள தொழில்நுட்பக் கல்விக்கழக மத்திய கல்லூரியில் தடுப்பூசி மையம் திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுவா சூ காங், சிமேய் ஆகிய இடங்களில் இரண்டாவது, மூன்றாவது தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்ட நிலையில், தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் இயக்கம் நேற்று தொடங்கியது.
தற்போதைய நிலையில் 300,000க்கும் அதிகமான மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு பதிவு செய்துகொண்டுள்ளனர்.
இவர்களில் இதுவரை 101,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக இரண்டாம் கல்வி அமைச்சரான மாலிக்கி ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
இது பற்றி நேற்று பேசிய அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான், "எங்களது முதல் தொகுப்பு மாணவர்கள், அதாவது கல்வி முடித்து பட்டம் பெறவிருக்கும் மாணவர்களில், 90 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக் கொள்ள பதிவு செய்துள்ளனர். இவர்களில், கிட்டத்தட்ட 75 விழுக்காட்டினர் முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்," என்று கூறினார்.
தற்போதைய நிலையில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி மருந்தை முழுமையாகப் போட்டுவிடுவது திட்டம் என்றும் அவர் விளக்கினார்.
அமைச்சின் தடுப்பூசி திட்டத்துக்கு இதுவரை எவ்வித பதிலும் தெரிவிக்காத பெற்றோரைத் தொடர்பு கொண்டு அவர்களின் கவலைகளை தெரிந்துகொள்ள ஆசிரியர்கள் முயன்று வருவதாக டாக்டர் மாலிக்கி தெரிவித்தார்.
"ஒருக்கால் பெற்றோர், இணையம் வழி எவ்வாறு பதிவு செய்து வது எனத் தெரியாமல் இருக்கலாம், அல்லது அவர்களுக்கு தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை குறித்த கேள்விகள் இருக்கலாம்.
இதனால்தான் நாங்கள் ஆசிரியர்களை பெற்றோருடன் தொடர்பு கொள்ள கூறியிருக்கிறோம்," என்று அவர் தெளிவுபடுத்தினார்.
சில பெற்றோருக்கு தங்கள் பிள்ளைகளை, குறிப்பாக இளம் வயது பிள்ளைகளை, தடுப்பூசி மையங்களுக்கு கூட்டிச் செல்வது சிரமமாக இருக்கலாம்.
இவர்களுக்கு உதவ நாங்கள் பள்ளி திறந்ததும் பெற்றோர், பிள்ளைகளின் ஆசிரியர்களைத் தொடர்பு கொள்ளுமாறு சொல்லியிருக்கிறோம் என்றும் டாக்டர் மாலிக்கி கூறினார்.

