கொவிட்-19 கிருமிப்பரவலால் பிடோக் நீர்த்தேக்கத்தில் கடல்நாகப் படகுப் போட்டி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நேற்று நடைபெறவில்லை.
பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் நடப்பில் இருப்பதால் கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பெரிய அளவிலான நிகழ்ச்சியைத் தன்னால் ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றது சிங்கப்பூர் கடல்நாகச் சங்கம்.
முன்னைய ஆண்டுகளில் இரண்டு நாட்களுக்கு படகுத் திருவிழா நடத்தப்பட்டது. அதில் சிங்கப்பூர் கடல்நாகச் சங்கத்தைச் சேர்ந்த 120க்கும் அதிகமான குழுக்களிலிருந்து பங்கேற்பாளர்கள், ஆதரவாளர்கள் என ஏறத்தாழ 3000 பேர் கலந்துகொள்வர்.
ஒரு படகைச் செலுத்த குறைந்தது ஐவர் தேவைப்படுவார்கள். ஆனால் ஒரு குழுவில் இருவருக்கு மட்டுமே அனுமதி எனும் கட்டுப்பாடு கடந்த ஞாயிற்றுக் கிழமை வரை இருந்தது.
சந்திரமுறை ஆண்டின் ஐந்தாவது மாதத்தின் ஐந்தாவது நாளில் சீனர்கள் கொண்டாடும் 'டம்ப்ளிங்' திருவிழாவை முன்னிட்டு, ஒவ்வோர் ஆண்டும் கடல்நாகப் படகுப் போட்டிகள் நடைபெறும். இவ்வாண்டு அந்தத் திருவிழா நேற்று அனுசரிக்கப்பட்டது.