சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பைத் தனியார் துறை பொருளியல் நிபுணர்கள் 5.8 விழுக்காட்டி
லிருந்து 6.5 விழுக்காட்டுக்கு உயர்த்தியுள்ளனர். கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க அண்மையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதிலும் சிங்கப்பூரின் பொருளியல் முன்னுரைக்கப்பட்டதைவிட கூடுதல் வளர்ச்சி அடையும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.8 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று கடந்த மார்ச் மாதம் முன்னுரைக்கப்பட்டது. ஆனால் இது 6 விழுக்காட்டுக்கு உயரும் என்று தற்போது கூறப்படுவதாக சிங்கப்பூர் நாணய ஆணையம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 1.1 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று முன்னுரைக்கப்பட்டிருந்தபோதிலும் 1.3 விழுக்காடு வளர்ச்சி பதிவானது.
இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் பொருளியல் 15 விழுக்காடு உயரும் என்று ஆய்வில் பங்கெடுத்தவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி அதற்கு முன் இல்லாத அளவில் 13.2 விழுக்காடு சரிவைக் கண்டது.
அடுத்த ஆண்டுக்கான பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பும் 3.8 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காட்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்க அண்மைய வாரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் சிங்கப்பூரின் பொருளியல் மீட்சியை அவ்வளவாகப் பாதிக்காது என்று பொருளியல் நிபுணர்கள் கூறினர்.
அண்மையில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும் சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான துறைகளால் தொடர்ந்து இயங்க முடிவதை சிஐஎம்பி தனியார் வங்கி பொருளியல் நிபுணர் சோங் செங் வுன் சுட்டினார்.
சில்லறை வர்த்தகம் மற்றும் உணவு, பானத் துறைகள்தான் பெரும்பாலும் பாதிப்புக்குள்ளாகிஇருப்பதாக அவர் தெரிவித்தார்.
பொருளியல் வளர்ச்சி கடந்த ஆண்டு சரிவைக் கண்டதாலும் அண்மையில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் இன்றைய சூழலில் பொருளியல் வளர்ச்சிக்கு ஏதேனும் பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தால் அவை தற்காலிகமானவை என்று ஓசிபிசி வங்கியின் பெட்டக ஆய்வு மற்றும் உத்திகள் பிரிவின் தலைவர் செலேனா லிங் கோடிட்டுக் காட்டி னார்.
மேலும், தடுப்பூசி போடும் திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அண்மையில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்கு அது தீர்வு காணும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டால் சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சிக்கான முன்னுரைப்பை பொருளியல் நிபுணர்கள் மேலும் உயர்த்துவர் என்று தெரிவிக்கப்பட்டது.
மின்னணுவியல் பொருட்களுக்கான தேவை உலகளவில் அதிகரித்துள்ளதால் உற்பத்தித்துறை எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமான வளர்ச்சியைக் கண்டது. இது ஒட்டுமொத்த பொருளியல் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
அனைத்துலகப் பயணங்களுக்காக நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அது பொருளியல் வளர்ச்சிக்கு வரப்பிரசாதமாக அமையும் என்றும் அவர்கள் கூறினர்.
இருப்பினும், கொவிட்-19 நெருக்கடிநிலை மோசமடைந்தாலும் அதை எதிர்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் பொருளியல் வளர்ச்சிக்குப் பின்னடைவாக அவை அமையும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.

