உணவுக்கடைக்காரர்கள் மின்னிலக்கத்தைத் தழுவி தங்களது வர்த்தகத்தை நிலையாக நீடிக்கச் செய்வது எவ்வாறு என்பது தொடர்பான அம்சங்களைப் பரிசீலிக்க பணிக்குழு ஒன்றை அமைக்க அரசாங்கம் திட்டமிடுகிறது.
உணவுக்கடைக்காரர்கள், உணவு விநியோகிப்பாளர்கள் மற்றும் இதர அமைப்பினர் போன்றோர் இக்குழுவிடம் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.
உணவுக்கடைக்காரர்கள் எதிர்கொள்ளும் கவலைகளும் உணவு விநியோகத் தளங்களுக்கு மாறுவதற்கு ஊக்குவிக்கும் வழிகளும் பணிக்குழுவின் விவாதங்களில் ஆராயப்படும். குழுவுக்கு தகவல் தொடர்பு அமைச்சும் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சும் தலைமை தாங்கும்.
உணவுக் கடைக்காரர்கள் எதிர்நோக்கும் கவலைகள் சிலவற்றை நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் விளக்கினார். தியோங் பாரு சந்தை மற்றும் உணவு நிலையத்திற்கு நேற்று வருகை புரிந்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார்.
தொழில்நுட்பத்திறன் பற்றாக்குறை, உணவு விநியோகத் தளங்களின் அதிக தரகு (கமிஷன்) விகிதம், ஒரே நேரத்தில் நேரடியாகவும் இணையம் மூலமாகவும் உணவு விநியோகத்தைக் கையாள்வதில் உள்ள சிரமங்கள் போன்றவை உணவுக்கடைக்காரர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்றார் அவர்.
டாக்டர் ஏமி கோருடன் தேசிய வளர்ச்சி, தொடர்பு தகவல் துணை அமைச்சர் டான் கியட் ஹாவும் வருகை தந்திருந்தார்.
சிங்கப்பூரில் உள்ள 6,000க்கும் மேற்பட்ட உணவுக் கடைக்காரர்கள் ஏற்கெனவே உணவு விநியோகத் தளங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதாகவும் இணையம் மூலமாக உணவு கேட்டு வரும் கோரிக்கைகளைக் கையாள்வதாகவும் டாக்டர் கோர் கூறினார். அரசாங்கத்துடன் தொழில்துறையினரும் பல்வேறு சமூகத் தொண்டூழியர்களும் இதற்கு ஆதரவு வழங்கியதன் பயனாக இது சாத்தியமாயிற்று என்றும் அவர் குறிப்பிட்டார்.
உணவு விநியோகத் தளங்களைப் பயன்படுத்த அரசாங்கம் ஊக்கமளித்து வருகிறது. அதற்காக ஒருமுறை வழங்கப்படும் $500 தொகையை உணவுக் கடைக்காரர்களுக்கு வழங்கி உதவுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு சுமார் 1,300 உணவுக் கடைக்காரர்கள் இந்த நிதி மூலம் பலன் அடைந்தனர்.

