அண்மையில் இடம்பெற்ற இனவாத, தீவிர சமயப் போக்கு தொடர்பான சம்பங்கள் குறித்து சிங்கப்பூர் தமிழர் பேரவை 30க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பாக கூட்டறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
"இவை புதிதோ அல்லது அசாதாரணமானவையோ அல்ல. இத்தகைய மோசமான செயல்கள் நம் அனைவரிடமும் உள்ள முன் தீர்மானத்தால் ஏற்படும் தவறான எண்ணங்களால் நடப்பவை. வெளிப்படையாகவும் நுட்பமாகவும் ஒவ்வொருநாளும் பாகுபாடுகள் இடம்பெறுகின்றன. அண்மைய சம்பவங்களில் சில கேமராவில் சிக்கியவை.
"குற்றவாளிகளைத் தண்டிப்பது பற்றியும், அவர்கள் எவ்வாறு சிங்கப்பூரர்களையும் நமது தேசிய விழுமியங்களையும் பிரதிபலிப்பதில்லை என்பது குறித்தும் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் அது போதாது," என்று அறிக்கை சுட்டியுள்ளது.
"முன்பைவிட, கருணையையும் புரிந்துணர்வையும் தற்போது கடைப்பிடிக்க வேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட அந்த அறிக்கை, இது பாதிக்கப்பட்டவருக்காக வருத்தப்படுவதோ அல்லது தவறான எண்ணங்களை எதிர்கொள்வதில் உள்ள சிக்கலை ஏற்றுக்கொள்வதோ மட்டும் அல்ல. இனவாத, தீவிர சமயப் போக்கு தொடர்பானவற்றை எவ்வாறு கையாளப்போகிறோம் என்பதையும் பாகுபாட்டை எவ்வாறு எதிர்கொள்கிறோம் என்பதையும் பொறுத்தது.
"அதிருப்தியை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசும்போதே அர்த்தமுள்ள மாற்றம் ஏற்படுகிறது. அமைதி காக்க முடிவு செய்வது இத்தகைய செயல்களை ஊக்குவிக்கப்பதாகவே அமையும் என்று," என்று குறிப்பிட்டது.
"போதிய அறிவோ, பார்வையோ இல்லை என்று சொல்வது மட்டும் போதாது. நமது சமுதாயத்தைப் பற்றி அறிந்துகொள்வதும், ஒருவருக்கொருவர், தீவிர சமயப் போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் சொல் வதைக் கேட்பதும் நமது பொறுப்பு. நமது அறிவைப் பெருக்குவதும் இத்தகைய மனப்போக்குக்கான சாக்குகள் இல்லை என்பதை உணர்ந்துகொள்வதாகும்.
"இச்சம்பவங்களில் சில தவறானவை என்பது தெளிவானது. இது தவறு என்பதை ஏற்றுக்கொள்வதிலும் தீவிரப்போக்குக்கு எதிராக நிற்பதிலும் நமக்கு நாமே உண்மையாக இருக்க வேண்டும்.
"இனவாதக் கருத்து கொண்டவர்கள் சக ஊழியராகவோ நண்பராகவோ குடும்ப உறுப்பினராகவோகூட இருக்கலாம்.
"தனிப்பட்ட முறையில் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் இனவாதத்துக்கு எதிரானவர்களாக இருக்க வேண்டும். எதிர்கொண்டு தீர்க்கப்படாதபோது வெறுப்பு வளர்கிறது.
"எனவே, எது போதுமானது இத்தகைய கேள்விகள் அரிதான, வசதியான அல்லது தெளிவான பதில்களைக் கொண்டவை. இனவாதத்துக்கு எதிரான போராட்டம் சிக்கலான, கடினமான பணி. ஆனால் அது கருணை, இரக்கம், புரிதலுடன் போராடப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு, "உங்கள் சிரமத்தைப் புரிந்துகொள்கிறேன், உங்களோடு தோளுடன் தோள் நிற்பேன்," என்று சொல்வது ஓர் எளிமையான தேர்வு," என அந்த அறிக்கை கூறிஉள்ளது.

