சீன நாளேடான லியான்ஹ சாவ்பாவ், இன உறவுகள் குறித்த அதன் அண்மை தலையங்கத்திற்கு உள்ளூர் கல்வியாளர்கள், அறிஞர்கள் வெளியிட்ட திறந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற இனவாத சம்பவங்கள் தொடர்பில், இன சமத்துவத்தை தொடர்ந்து நிலைநிறுத்தவும், சிங்கப்பூரில் உள்ள அனைத்து இனத்தவர்களிடையேயும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கவும் தான் தொடர்ந்து செயல்பட்டுவருவதாக அத்தலையங்கத்தில் அந்த நாளிதழ் குறிப்பிட்டிருந்தது.
சீன நாளிதழாக, அண்மையில் இடம்பெற்ற இனவாத, தீவிர சமயப் போக்கு தொர்பான சம்பவங்களைக் கண்டிப்பதாகவும், தனது தலையங்கங்கள் மூலமாக இன நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதாகவும் அது கூறியது.
இதற்கு எழுதப்பட்ட திறந்த கடிதத்தில் பேராசிரியர்கள் லிண்டா லிம், லீ சூ ஆன், வினீதா சின்ஹா, பாங் எங் போங் உட்பட முனைவர் ஆய்வுப் படிப்பு மாணவர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
'இன நல்லிணக்கத்தை வளர்க்க பொது வெளியை விரிவு படுத்துதல்' என்ற தலைப்பில் ஜூன் 9ஆம் தேதி வெளிந்த சீன நாளிதழின் தலையங்கத்தில், இனவாத பிரச்சினை குறித்து வகைப்படுத்தியிருப்பதைப் பற்றி கவலை கொள்வதாக அக்கடிதம் தெரிவித்தது.
இனவாதம் கட்டமைக்கப்படுவதன் இயக்கவியலையும் சிங்கப்பூரில் நீண்டகாலமாக இருக்கும் இனம் தொடர்பான ஒரே மாதிரியான மனப்போக்கையும் இது புறக்கணிக்கிறது என்று கடிதம் கூறியிருந்தது.
இனவாதம் என்பது தனிப்பட்ட தவறான எண்ணங்களைப் பற்றியது மட்டுமல்ல, அமைப்பு முறைகளாலும் கொள்கைகளால் ஏற்படுகிறது என்றும் அது கூறியது.
ஜூன் 9 தலையங்கத்தை வாசகர்கள் முழுமையாகப் பார்ப்பார்கள் என்று நம்புவதாக இக்கடிதத்திற்கு சீன நாளிதழ் பதிலளித்திருந்தது. மூன்று வெவ்வேறு அம்சங்களிலிருந்து பிரச்சினையை பகுப்பாய்வு செய்வதாகவும், கொள்ளைநோய், சமூக ஊடகங்களின் பங்கு, வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பிரபலமான கருத்தியல் போக்குகள் அனைத்தும் இன பதற்றத்தை பெரிதாக்கிவிட்டதை விளக்க முற்படுவதாகவும் அது கூறியது.
"சிங்கப்பூரில் இனம் குறித்த பிரச்சினையைப் பற்றி விவாதிக்கும்போது, வெளிநாட்டு நிலைமைகளையும் கருத்துகளையும் உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளாமல் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது.
"ஒவ்வொரு சமூகத்திலும் இனப் பாகுபாடு நிலவுகிறது. சில பொதுவானவை, சில ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்தன்மையானவை.
"இன நல்லிணக்கம், அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் ஒரு பொதுவான இலக்கு. கடிதத்தில் கையெழுத்திட்ட அறிஞர்கள் இதனை பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதையும் பிரச்சினை குறித்த பகுத்தறிவான, வெளிப்படையான கலந்துரையாடலை வரவேற்கிறார்கள் எனவும் நம்புகிறோம்," என்று சீன நாளிதழான சாவ்பாவ் தனது பதிலில் கூறியுள்ளது.

