கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து சீனாவிற்காக உளவுபார்த்த சிங்கப்பூர் ஆடவர் ஈராண்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
டிக்சன் இயோ, 40 (படம்) என்ற இந்த ஆடவர் பணத்திற்காக வெளிநாட்டிற்கு உளவுபார்த்ததாக உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு நேற்று தெரிவித்தது.
சீனாவிற்காக உளவுபார்த்ததற்காக அமெரிக்காவில் இயோ 14 மாதம் சிறைவாசத்தை அனுபவித்தார். அதன்பின் சிங்கப்பூருக்கு நாடுகடத்தப்பட்ட அவரை உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு கடந்த டிசம்பர் 30ஆம் தேதி கைது செய்தது. அதன்பின் இவ்வாண்டு ஜனவரி 29ஆம் தேதி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர்மீது தடுப்புக்காவல் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
"வெளிநாடு ஒன்றின் உளவுத்துறைக்காக இயோ வேலை செய்ததை விசாரணைகள் உறுதிப்படுத்தின. பணத்திற்காக வெளிநாட்டுக் கையாள்களுடன் அவர் பல வேலைகளைச் செய்துள்ளார்," என்று உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.
சிங்கப்பூர் தொடர்பான தகவல்களைத் திரட்டித் தரும்படியும் இவரிடம் கேட்கப்பட்டது. அதற்காக இவர் சிங்கப்பூரில் பலரையும் அணுகி, தகவல்களைப் பெற முயன்றதாகக் கூறப்பட்டது.
தமது தகவல் திரட்டு நடவடிக்கைகளை மறைப்பதற்காக இயோ இங்கு ஒரு நிறுவனத்தையும் நிறுவினார்
"தமது தகவல் சேகரிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்காக சிங்கப்பூர் அரசாங்கப் பணியிலும் இயோ சேர முயன்றார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. 2016ஆம் ஆண்டில் இருந்து, 2019ல் அமெரிக்காவில் கைது செய்யப்படும்வரை அவர் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்," என்று உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு விளக்கியது.
விசாரணைகள் தொடர்கின்றன என்றும் இயோவின் நடவடிக்கைகள் குறித்து முழுமையாக அறிய அவர் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட வேண்டியுள்ளது என்றும் அவ்வமைப்பு குறிப்பிட்டது.
2015ல் பெய்ஜிங் சென்றிருந்தபோது, ஆய்வுக்குழுக்களைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக்கொண்ட சீன முகவர்களால் இயோ பணியமர்த்தப்பட்டார். அப்போது, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் லீ குவான் இயூ பொதுக் கொள்கைப் பள்ளியில் இயோ முனைவர் பட்டம் பயின்று வந்தார்.
அரசியல் அறிக்கைகள், தகவல்களை வழங்குவதற்காகப் பணம் பெற்றதை இயோ ஒப்புக்கொண்டதை அமெரிக்க நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன. முதலில் தென்கிழக்காசியா மீதும் பின்னர் அமெரிக்காவின் மீதும் இவரது கவனம் இருந்தது.
தம்முடன் தொடர்பிலிருந்த சீன முகவர்களைச் சந்திப்பதற்காக இவர் பலமுறை பயணம் செய்தார். 'ரெசொல்யூட் கன்சல்ட்டிங்' எனும் புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனத்தின் பெயரில் போலி ஆலோசனை நிறுவனம் ஒன்றைத் தொடங்குமாறும் இவர் பணிக்கப்பட்டார்.
2018 தொடக்கத்தில் சிங்கப்பூரில் அந்நிறுவனத்தைப் பதிவுசெய்த இயோ, 400க்கும் மேற்பட்ட தன்விவரக் குறிப்புகளையும் பெற்றார். அவை பெரும்பாலும் அமெரிக்க ராணுவத்தினர், அரசாங்கப் பணியாளர்களினுடையவை எனக் கூறப்பட்டது.
பின்னர் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் வேலை கிடைக்க, தமது உளவு நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக இயோ அங்கு சென்றார்.
2019 ஜனவரி முதல் 2019 ஜூலை வரை இயோ வாஷிங்டனில் வசித்தார். அப்பகுதியில் இருந்தபடி, தகவல்களைப் பெறுவதற்காக, தனிநபர்களை அடையாளம் கண்டு, அணுகும் முயற்சிகளில் இவர் இறங்கினார்.
பின்னர் 2019 நவம்பரில் அமெரிக்கா திரும்பியபோது, நியூயார்க் ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் இயோவிடம் குடிநுழைவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதனால் அச்சமடைந்த இயோ, மறுநாளே சிங்கப்பூர் திரும்ப விமானத்திற்கு முன்பதிவு செய்தார். அப்போது, அமெரிக்கப் புலனாய்வுத் துறை (எஃப்பிஐ) அதிகாரிகள் இவரை அணுக, விசாரணைக்கு ஒத்துக்கொண்டார். அதைத் தொடர்ந்து இவர் காவலில் வைக்கப்பட்டார்.
அமெரிக்காவில் இயோ கைதானது, குற்றத்தை ஒத்துக்கொண்டது குறித்த செய்தி கடந்த ஜூலையிலும் தண்டனை விதிக்கப்பட்ட செய்தி கடந்த அக்டோபரிலும் வெளியாயின.
"வெளிநாட்டு அரசுடன் ரகசிய உறவுகொண்டு, அதன் கட்டளைப்படி நமது தேசப் பாதுகாப்புக்கும் நலன்களுக்கும் குந்தகம் விளைவிக்கும்படியான நடவடிக்கைகளில் எவரேனும் ஈடுபடுவதைச் சிங்கப்பூர் அரசாங்கம் மிகக் கடுமையானதாக எடுத்துக்கொள்ளும்," என்று உள்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவு எச்சரித்து இருக்கிறது.

