இவ்வாண்டு இறுதிக்குள், மாதந்தோறும் கீரை, மக்காச்சோளம், பூசணி போன்ற புதிதாக விளைவிக்கப்பட்ட காய்கனிகள் கிட்டத்தட்ட 1,300 குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
புருடென்சியல் காப்புறுதி நிறுவனத்தின் ஊட்டச்சத்துத் திட்டம் நீட்டிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
புருடென்சியல் சிங்கப்பூர் நிறுவனமும் 'கிட்ஸ்டார்ட் சிங்கப்பூர்' அமைப்பும் இணைந்து, இந்த 'ஹெல்த்தி வித் கிட்ஸ்டார்ட்' திட்டத்தைக் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தின.
கடந்த மே மாத நடுப்பகுதியில் தொடங்கிய காய்கனி விநியோகம் இவ்வாண்டு இறுதிவரை தொடரும். இந்த மாதம் குறைந்தது 200 குடும்பங்களுக்குக் காய்கனிகள் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் சென்ற ஆண்டு 800 குடும்பங்கள் பலன் அடைந்த நிலையில், இவ்வாண்டு கூடுதலாக 500 குடும்பங்கள் பலன்பெறும்.
ஏழு வயதுக்கும் குறைந்த குழந்தைகளைக் கொண்ட குறைந்த வருமானக் குடும்பங்களுக்குக் குழந்தை மேம்பாடு, உடல்நலம், சமூக ஆதரவு வழங்கி வரும் 'கிட்ஸ்டார்ட்' திட்டத்தின்கீழ் அந்தக் குடும்பங்கள் வருகின்றன.
அத்திட்டத்தின்கீழ் பயனடைந்து வருபவர்களில் 29 வயதான திருவாட்டி நாடியா நபிகா டூடி விட்ஜயாவும் ஒருவர். நான்கு பிள்ளைகளுக்குத் தாயான அவர், சென்ற ஆண்டைப் போலவே இவ்வாண்டும் புதிய உணவுப்பொருள்கள் அடங்கிய பைகளைப் பெற ஆர்வமாக இருக்கிறார்.
"புதிய உணவுப்பைகள் எங்களது அன்றாடச் செலவுகளை மிச்சப்படுத்த உதவுகின்றன. அப்படிச் சேமித்த பணத்தை மருத்துவம், போக்குவரத்து போன்ற அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது," என்றார் திருவாட்டி நாடியா.
காய்கனிகளுடன் 'ஆரோக்கிய உணவுத்தட்டு' ஒன்றும் இம்முறை அந்த உணவுப்பைகளுடன் சேர்த்துத் தரப்படுகிறது. முழுநிறைவான உணவில் எந்தெந்த உணவு, எந்த அளவில் இடம்பெற வேண்டும் என்பதைக் குறிக்கும் விதமாக அந்த உணவுத்தட்டு பிரிக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாண்டு இறுதிக்குள் அத்தகைய 2,000 தட்டுகள் விநியோகிக்கப்படும்.
இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் சத்தான உணவுப்பொருள்களையும் சுவையான, ஊட்டச்சத்துமிக்க உணவுகளைச் சமைக்கும் வகையில் பகிரப்படும் பயனுள்ள குறிப்புகளையும் பல குடும்பங்களும் அனுபவித்து மகிழ்கின்றன என்று கிட்ஸ்டார்ட் சிங்கப்பூர் அமைப்பின் தலைமை நிர்வாகி ரஹாயு புவாங் குறிப்பிட்டார்.