அமைச்சர் மசகோஸ்: சவால்களுக்கு இடையே உறுதியாய் நின்ற முஸ்லிம்கள்
கொவிட்-19 சூழல் ஏற்படுத்திய சவால்களுக்கு இடையிலும், உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்கள் தங்களது சமய நடை முறைகளைக் கடைப்பிடிப்பதில் உறுதியுடன் இருந்ததாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தெரிவித்து இருக்கிறார். வீட்டிலேயே அன்றாட, கூட்டுத் தொழுகைகளை மேற்கொள்வது, ஹஜ் யாத்திரை வரம்பை ஏற்றுக்கொண்டது போன்ற வழிகளில் முஸ்லிம்கள் சில மாற்றங்களைச் செய்துகொண்டதை அவர் குறிப்பிட்டார். அத்துடன், சமயக் கற்றலையும் நல்வாழ்வையும் மேம்படுத்திக்கொள்ள முஸ்லிம் கல்விமான்கள் மின்னிலக்க வாய்ப்புகளைப் பற்றிக்கொண்டதையும் அவர் சுட்டினார். சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) நேற்று ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டபோது அமைச்சர் மசகோஸ் இவ்வாறு பேசினார்.
இளம்பெண் கொலை: மூவர் மீது பத்துக்கும் மேலான குற்றச்சாட்டுகள்
பதின்ம வயதுச் சகோதரியை மரக்கழி கொண்டு தாக்கி, அவரைக் கொன்றுவிட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரும் அவரின் கூட்டாளிகள் இருவரும் பத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர். பிணை தரப்படாமல் அவர்கள் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஹுவாங் போக்கன், 29, லிம் பெங் டியோங், 62, ஆகிய ஆடவர்கள் மீதும் சீ மெய் வான், 41, என்ற பெண் மீதும் இப்போது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் நிலையும் உயர்த்தப்பட்டுள்ளது. கிளமென்டி வெஸ்ட் ஸ்திரீட் 1, புளோக் 602ல் உள்ள ஒரு வீட்டில் சென்ற மாதம் 4ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் ஹுவாங் பாவ்யிங், 19, என்ற பெண்ணை அம்மூவரும் சேர்ந்து மரக்கழியால் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இருக்கிறது.
பெண்ணைக் கொன்றுவிடுவதாக மிரட்டியவர்க்குச் சிறை, அபராதம்
தம்முடன் கொண்டிருந்த நெருக்கமான உறவைக் கைவிட விரும்பிய பெண்ணையும் அவரின் தாயாரையும் காதலனையும் கொன்றுவிடுவதாக மிரட்டிய ஆடவர்க்கு ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனையும் 3,000 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது. கேப்ரியல் ஹெங் ஜிங் ஹெங் என்ற அந்த 26 வயது சிங்கப்பூரர் தன் மீதான மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். அந்த 24 வயதுப் பெண்ணின் வீட்டையும் கொளுத்திவிடுவதாக கேப்ரியல் மிரட்டியதாகக் கூறப்பட்டது. கடந்த 2016ல் அறிமுகமானதை அடுத்து, அப்பெண்ணும் கேப்ரியலும் நெருக்கமாயினர். ஆனாலும், கேப்ரியல் தம்மைத் 'தன்னுடைமை'யாகக் கருதுவதாக நினைத்த அப்பெண், 2017 டிசம்பரில் அவருடன் இருந்த நட்புறவை முறித்துக்கொள்ள விரும்பினார். இப்போது $15,000 பிணையில் வெளியில் இருக்கும் கேப்ரியல், தமது சிறைவாசத்தைத் தொடங்கும் விதமாக ஜூலை 19ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.
இருவர் உடலில் மின்சாரம் பாய்ந்தது
விளக்குக் கம்பத்தில் இருந்து, பதின்ம வயதினர் இருவர் உடலில் மின்சாரம் பாய்ந்த (electric shock) சம்பவம் லோரோங் 5 தோ பாயோவில் கடந்த ஞாயிறு இரவு நிகழ்ந்தது. புளோக் 63க்கு முன்னால் உள்ள சிறிய திடலில் அவர்கள் காற்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. அவ்விருவரும் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பின்னர் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

