இருவர் உடலில் மின்சாரம் பாய்ந்த சம்பவம்: மின் விளக்குக் கம்பத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக இருக்கலாம்

இருவர் உடலில் மின்சாரம் பாய்ந்த சம்பவம்: மின் விளக்குக் கம்பத்தில் ஏற்பட்ட சேதம் காரணமாக இருக்கலாம்

2 mins read
6f0cb001-e56a-4b8a-a93a-13e73de4dfc1
-
multi-img1 of 2

மின் விளக்குக் கம்பத்தில் உள்ள மின் இணைப்புக் கம்பியை சுற்றியிருந்த பொருளில் ஏற்பட்ட சேதமே தோ பாயோ லேரோங் 5, புளோக் 63 உடலுறுதிப் பூங்காவில் மின்சாரம் பாயக் காரணமாக இருந்தது என்று பீஷான்-தோ பாயோ நகரமன்றம் கூறியுள்ளது.

அந்த உடலுறுதிப் பூங்காவில் முகமது நஸ்லான், 34, என்பவரின் 10 வயது மகள் உதவி கேட்டு கதறுவதைக் கேட்டு அவர் திடுக்கிட்டார்.

தமது மகன் மின் விளக்குக் கம்பத்துக்கு அருகே மயங்கி விழுந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போனார். அவரது 14 வயது மகன் முகமது ரிஃப்கி, தோழன் ஒருவருடன் காற்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது பந்து மின் விளக்குக் கம்பம் நோக்கிச் சென்றது.

அதை எடுக்கப் போன ரிஃப்கி, தான் விழாமல் இருக்க மின்கம்பத்தை தாங்கிப் பிடித்துக்கொண்டபோது அவர் மீது மின்சாரம் பாய்ந்து அவர் மயங்கி விழுந்தார். அவரைக் காப்பாற்ற முயன்ற அவர் தோழனுக்கும் அதேபோல் மின்சாரம் பாய்ந்தது. திரு நஸ்லான் தமது மகனைக் காப்பாற்ற முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது.

"எனது இதயத்தில் கூர்மையான ஏதோ ஒன்று தாக்குவதுபோல் உணர்ந்தேன். அதைத் தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

"எனது கையால் மகனை அங்கிருந்து இழுத்து காலால் மெல்ல அவனை உதைத்து தள்ளியபோது எனது கை, கால் என இரண்டு இடங்களிலும் மின்சாரம் தாக்குவதை உணர்ந்தேன்.

"அப்பொழுது எனக்குத் தோன்றியதெல்லாம் எனது மகன் இறக்க நேரிட்டால், நானும் இறப்பேன் என்பதுதான்," என்று தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரித்தார் திரு நஸ்லான்.

ரிஃப்கியுடன் விளையாடிய அவனது தோழனுக்கு மின்சாரம் பாய்ந்த உடனே அவனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் அவன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டதாகவும் திரு நஸ்லான் கூறினார்.

இதுபற்றிக் கூறும் நகர மன்றம், இந்தப் பிரச்சினை சரிசெய்யப்பட்டு விட்டதாகக் கூறுகிறது.

அந்தப் பகுதிக்கு நேற்று சென்ற செய்தியாளர்கள் அங்கிருக்கும் மூன்று மின் விளக்குக் கம்பங்களையும் மாற்றுவதைக் காண முடிந்ததாகக் கூறினர்.

உடல் தசைநார்களில் காயம், நெருப்புக் காயங்கள் போன்றவற்றுக்காக ரிஃப்கி கே கே மகளிர், சிறார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.