மக்கள்தொகை கணக்கெடுப்பு: குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவது தொடர்பான சிந்தனைப்போக்கில் மாற்றம்
'இனம் அடிப்படையிலான தரவுகள் முக்கியம்'
மக்கள்தொகை கணக்கெடுப்பில் இனம் அடிப்படையிலான தரவுகள் தேவை என்றார் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா. இத்தரவுகள் மூலம் இனரீதியாக வெவ்வேறு பிரிவுகளுக்கு அர்த்தமுள்ள வகையில் உதவலாம் என்றார் அவர்.
எந்தப் பிரிவினரும் பின்னுக்குத் தள்ளப்படக்கூடாது என்றும் தலையீட்டு திட்டங்கள் மூலம் உதவி வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இத்தகைய தரவுகள் தேவை என்றார் அமைச்சர் இந்திராணி. மற்ற இனங்களைக் காட்டிலும் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் பின்தங்கியுள்ளவர்களை அடையாளம் கண்டு உடனே நிலையை மேம்படுத்தும் பொருட்டு தரவுகள் கைகொடுக்கும் என்று அவர் சுட்டினார்.
இதற்கிடையே அண்மைய இனவாத சம்பவங்கள் குறித்தும் பேசிய அவர், பல இன, சமய, மொழிச் சூழல் சிங்கப்பூரில் தொடர்ந்து இருப்பது முக்கியம் என்று வலியுறுத்தினார்.
இன்றைய சிங்கப்பூரர்கள், பத்து ஆண்டுகளுக்கு முன் இருந்தவர்களைக் காட்டிலும் திருமணம், பிள்ளைபேறு ஆகியவற்றில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை. அதிகமான இளம் சிங்கப்பூரர்கள் ஒற்றையராக இருக்கும் வாழ்க்கைமுறையையே விரும்புகின்றனர்.
குடும்ப வாழ்க்கை தொடர்பான சிந்தனைப்போக்கு காலப்போக்கில் மாறிவிட்டதைப் பிரதிபலிக்கும் வகையில் நேற்று வெளியிடப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிக்கை விளங்கியது.
திருமணம், மணமுறிவு, இறப்பு
திருமணமான சிங்கப்பூர்வாசிகளின் விகிதம் சற்று குறைந்துள்ளது. 2010ல் பதிவான 59.4 விழுக்காடு, 2020ஆம் ஆண்டில் 58.8 விழுக்காடானது.
தம்பதியரிடையே மணமுறிவு ஏற்பட்டுள்ள விகிதம், 2010ல் இருந்த 3.3 விழுக்காட்டிலிருந்து சென்ற ஆண்டு 4.3 விழுக்காடாக அதிகரித்திருந்தது.
வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் நிலையை ஒப்பிடும்போது, ஆண்களைக் காட்டிலும் பெண்களின் எண்ணிக்கையே தொடர்ந்து கூடுதலாக இருந்தது.
2020ல் கணவன்மாரை இழந்த மாதரின் விகிதம் 8.4 விழுக்காடாக இருந்தது. மனைவியரை இழந்த கணவன்மார்களின் விகிதம் 1.9 விழுக்காடு.
ஒற்றையர்கள் அதிகரிப்பு
அனைத்து வயதினரிலும் ஒற்றையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் 25 வயதுக்கும் 34 வயதுக்கும் இடைப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக அதிகமாக உயர்ந்திருந்தது.
2010க்கும் 2020க்கும் இடையே 25 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களில் ஒற்றையராக உள்ள ஆண்களின் விகிதம் 74.6 விழுக்காட்டிலிருந்து 81.6 விழுக்காடாக அதிகரித்தது. ஒற்றையராக இருந்த மாதர் எண்ணிக்கை 2010ல் பதிவான 54 விழுக்காட்டிலிருந்து 2020ல் 69 விழுக்காடானது.
அதிக பிள்ளைகள் வேண்டாம்
பத்தாண்டுக்கு முன்னர் இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் அதிகமான பிள்ளைகள் பெற்றெடுக்க விரும்பாத போக்கு பெண்களிடத்தில் காணப்பட்டது. 2010ல் ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 2.02 குழந்தைகள் என்று பதிவாகி இருந்தது. ஆனால் 2020ல் இது 1.76 ஆகக் குறைந்தது.
காலம் தாழ்த்தித் திருமணம் செய்வது, நிதிச் சுமை, பிள்ளை வளர்ப்பின்போது கல்வியால் ஏற்படக்கூடிய அழுத்தங்கள் போன்றவை காரணங்களாகக் கூறப்படுகிறது.
எல்லா இனத்தவரிடமும் வெவ்வேறு கல்வித் தகுதியுடையோரிடமும் இந்தப் போக்கு காணப்பட்டது.
இதன்படி 2020ல் ஓர் இந்தியப் பெண்ணுக்கு 1.86 குழந்தைகள், மலாய் பெண்ணுக்கு 2.43 குழந்தைகள், சீனப் பெண்ணுக்கு 1.65 குழந்தைகள் எனப் புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டுள்ளன. தொடர்ந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் போக்கே பெரும்பாலான சிங்கப்பூர் பெண்களிடம் காணப்பட்டது.
பத்தாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பில் 150,000 குடும்பங்கள் பங்கேற்றனர்.

