இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு அருகே அண்மையில் சரக்குக் கப்பல் எரிந்ததைத் தொடர்ந்து, அந்தக் கடற்கரைப் பகுதியில் ஐந்து டால்ஃபின்கள், 30க்கும் மேற்பட்ட கடல் ஆமைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் கொடியைத் தாங்கிய 'எக்ஸ்-பிரஸ் பெர்ல்' என்ற அந்தக் கப்பல் துறைமுகத்திற்கு அருகே மே 20ஆம் தேதி அன்று தீப்பிடித்து எரிந்தது. அதனால், எண்ணெய், ரசாயனங்கள், பிளாஸ்டிக் துகள்கள் கப்பல் தளத்திலிருந்து கடலுக்குள் சிந்தப்பட்டுள்ளன.
இடம் பெயராத நீல திமிங்கிலம், டால்ஃபின்கள் உள்ளிட்ட பலவகையான பெரிய கடல் பாலூட்டிகள் வாழும் அந்த கடற்பகுதி இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரை தளமாகக் கொண்ட 'எக்ஸ்-பிரஸ் ஃபீடர்' கப்பல் நிறுவனத்திடமிருந்து இடைக்கால இழப்பீடாக இலங்கை 40 மில்லியன் அமெரிக்க டாலரைக் (53 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) கோருகிறது. இத்தொகை மே 20 முதல் ஜூன் 1 வரையிலான தீயணைப்புச் செலவுகளை ஈடுகட்டுவதாகும்.
கப்பலில் மீதமுள்ள எண்ணெய், 'சோடியம் டைஆக்சைடு', தாமிரம், ஈயம் போன்ற ரசாயனங்கள் வெளியேறினால் அது அப்பகுதியில் உள்ள வளமான கடல் வாழ்வை அழிக்கக்கூடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.